கடலூரில் நாளை வழக்கம் போல் கடைகள் செயல்படும்- மாவட்ட ஆட்சியர்
கடலூரில் நாளை வழக்கம் போல் கடைகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி என்எல்சி நிர்வாகம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள மேல் வளையமாதேவி கீழ் வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பகுதியில் நிலங்களை கையகப்படுத்தும் செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
என்எல்சிக்கு எதிராக கண்டனம்
அதன்படி, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்களது கண்டன்னகளை தெரிவித்து வரும் நிலையில், என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் போது, ஏற்கனவே கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டம்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கடலூர் மாவட்ட உழவர்களின் நிலங்களை பறிக்கும் என்எல்சி நிறுவனத்தையும், அதற்கு துணையாக செயல்படும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கடலூர் மாவட்ட பாமக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
எனவே, என்எல்சிக்கு எதிரான முழு அடைப்பு போராட்டத்திற்கு வணிகர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும். உழவர்களையும், பொதுமக்களையும் கிள்ளுக்கீரையாக கருதும் என்எல்சிக்கு பாடம் புகட்ட வேண்டும். பொதுமக்கள், இளைஞர்கள், மாணவச்செல்வங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வழக்கம் போல் கடைகள் செயல்படும்
நாளை பாமக முழுஅடைப்புப் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் இயல்பான முறையில், வழக்கமான நடைமுறைகள் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும், வழக்கம் போல் கடைகள் செயல்படும் என்றும், காவல்துறை மூலம் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.