சியோமி நிறுவனத்தின் புதிய படைப்பு ஜூன் 7 அன்று வெளியீடு ..!
சியோமி நிறுவனத்தின் ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் ஜூன் 7-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் புதிய டீசரில் அந்நிறுவனம் MIUI 10 குளோபல் ரோம் வெளியீடும் இதே தேதியில் நடைபெறும் என தெரியவந்துள்ளது.
முன்னதாக சீனாவில் நடைபெற்ற Mi8 நிகழ்வில் சியோமி நிறுவனம் MIUI 10 அறிமுகம் செய்தது. அந்த வகையில் இம்முறை MIUI 10 குளோபல் ரோம் வெளியிடப்படலாம் என சியோமி வெளியிட்டிருக்கும் டீசரில் தெரியவந்துள்ளது. அடுத்த வாரம் நடைபெற இருக்கும் விழாவில் வெளியீட்டு விவரங்களுடன் இவை சப்போர்ட் செய்யும் சாதனங்களின் பட்டியல் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
சியோமி கம்யூனிட்டி ஃபோரமில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும் டீசரை சியோமி இந்தியா துணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மனு ஜெயின் பகிர்ந்துள்ளார். கடந்த ஆண்டு ரெட்மி வை1 அறிமுக நிகழ்விலேயே MIUI 9 அறிவிக்கப்பட்ட நிலையில், இதே ஆண்டும் முந்தைய வழக்கத்தை பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஆன்ட்ராய்டு சார்ந்து இயங்கும் MIUI 10 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் சக்தியூட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய யூசர் இன்டர்ஃபேஸ் மிகமுக்கிய அம்சங்களில் ஒன்றாக அதன் செயற்கை நுண்ணறிவு போர்டிரெயிட் அம்சம் இருக்கிறது. இந்த அம்சம் புதிய இயங்குதளம் கொண்டிருக்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் போக்கெ எஃபெக்ட் புகைப்படங்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஒற்றை அல்லது இரட்டை கேமரா கொண்டிருக்கும் எவ்வித ஸ்மார்ட்போன்களிலும் போக்கெ எஃபெக்ட் பெற முடியும். இத்துடன் விட்ஜெட், ஏஐ பிரீலோடு மற்றும் இன்டகிரேட் செய்யப்பட்ட ஸ்மார்ட் ஹோம் டிவைஸ் சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
சியோமியின் MIUI 10 சீனா டெவலப்பர் ரோம் மற்றும் இதை சப்போர்ட் செய்யுயம் சாதனங்களின் பட்டியல் Mi8 நிகழ்வில் அறிவிக்கப்பட்ட நிலையில், MIUI 10 குளோபல் ரோம் வெளியீட்டு விவரம் மற்றும் இதனை சப்போர்ட் செய்யும் சாதனங்களின் பட்டியல் ஜூன் 7-ம் தேதி தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.