உக்ரைன் மீது ரஷ்யா, மீண்டும் ஏவுகணை தாக்குதல்.!
ரஷ்யா கடந்த 3 வாரங்களுக்கு பிறகு மீண்டும் உக்ரைன் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது.
தலைநகர் கீவ் உட்பட உக்ரைன் முழுவதும் பல இடங்களில் ரஷ்யா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. உக்ரைனின் பல நகரங்கள் மீது, ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தி எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் சில குடியிருப்புக் கட்டிடங்களைக் குறிவைத்து தாக்கியதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இருநாடுகளுக்கிடையே கடந்த வருடம் முதல் போர் தொடங்கி ஒருவருடமாக நடைபெற்று வருகிறது. எல்லை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ரஷ்யா, உக்ரைனின் பகுதிகளில் கட்டுப்படுத்தும் விதமாக ராணுவ தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
கடந்த மூன்று வாரங்களில் ரஷ்யா, இதுபோன்ற ஏவுகணை தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை. இதனால் உக்ரைனின் பல பிராந்தியங்களில், வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாக உக்ரேனிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரம் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் 15 முறை தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும், குடியிருப்பு கட்டிடங்கள் மீது குறிவைத்து தாக்கப்பட்டதாகவும் கார்கிவ் கவர்னர் ஓலே சினிஹுபோவ் தெரிவித்தார்.
ரஷ்யா கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் உக்ரைன் மீது, ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆரம்பத்தில், நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள், வாரந்தோறும் நடத்தப்பட்டன, இதனால் உக்ரைனின் முழு நகரங்களையும் இருளில் மூழ்கின. கடைசியாக ரஷ்யா, கடந்த பிப் -16இல் உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.