விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்குக – இபிஎஸ்
24 மணி நேரமும் விவசாயிகளுக்கு விலையில்லா மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று இபிஎஸ் வலியுறுத்தல்.
செயற்கையான மின்தட்டுப்பாடு:
விவசாயப் பெருங்குடி மக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். முறை வைத்து மும்முனை மின்சாரம் பிரித்து வழங்கப்படும் என்று அறிவித்துளைத்து ஏற்புடையதல்ல, இதனால் பாதிக்கப்படுவார்கள். செயற்கையான ஒரு மின்தட்டுப்பாட்டை திமுக அரசு ஏற்படுத்துகிறதோ விவசாயிகள் எண்ணுகின்றனர்.
மும்முனை மின்சாரம்:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் விவசாயிகளுக்கு உள்ள குறைகளைக் களைந்து, அவர்களின் வாழ்வு ஒளிர எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வந்ததை விவசாயப் பெருங்குடி மக்கள் நன்கு அறிவார்கள். எந்தவிதத்திலும் நம் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 24 மணி நேரமும் மும்முனை மின்சாரத்தை விவசாயப் பெருமக்களுக்கு வழங்கி, விவசாய உற்பத்தியைப் பெருக்கி இதய தெய்வம் அம்மா அவர்களின் ஆட்சியும், எனது தலைமையிலான அம்மா அரசும் சாதனை படைத்தது.
மின்சாரத் தட்டுப்பாடு:
எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான காரணம் என்ன என்று, இன்றுவரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது. துறைதோறும் கமிஷன் அடிப்பதையே கொள்கையாகக்கொண்ட இந்த அரசு, செயற்கையான ஒரு மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறதோ என்ற எண்ணம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
இபிஎஸ் குற்றசாட்டு:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மின்சாரத் தட்டுப்பாடு இல்லாமல் இருந்த நிலை மாறி, தற்போதைய விடியா திமுக ஆட்சியில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. சுமார் ஒரு லட்சம் இலவச மின்சார இணைப்பை இந்த 22 மாத கால ஆட்சியில் தந்தோம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த ஆட்சியாளர்கள், அதன் பலனை விவசாயிகள் முழுமையாக அனுபவிக்க முடியாத அளவில்தான் செயல்பட்டு வருகின்றனர்.
இரண்டாக பிரிப்பு:
24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சாரம் வரும்போதே விவசாயப் பணிகளில் பல்வேறு இடையூறுகளை சந்திக்கும் விவசாயிகள், தற்போதைய இந்த ஆட்சியாளர்களின் தாந்தோன்றித்தனமான நடவடிக்கையால் கடும் பாதிப்புக்கு விவசாயிகள் உள்ளாகி இருக்கிறார்கள். ஓரிரு நாட்களுக்கு முன்பு இந்த விடியா திமுக அரசு, தமிழ் நாட்டை டெல்டா மாவட்டங்கள் என்றும், டெல்டா அல்லாத மாவட்டங்கள் என்றும் இரண்டாகப் பிரித்து, காலையில் 6 மணி நேரம், இரவில் 6 மணி நேரம் என்று ஒரு நாளைக்கு மொத்தம் 12 மணி நேரம் மட்டுமே விவசாயிகளுக்கு விலையில்லா மின்சாரம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இபிஎஸ் வலியுறுத்தல்:
விவசாயிகள் மின்சாரத்தை பயன்படுத்தாவிட்டால் உற்பத்தி செலவு குறையும் என்று அரசு தப்புக்கணக்கு போடுகிறது. எனவே, உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோர் என்ற உயரிய லட்சியத்தோடு வாழும் விவசாயப் பெருங்குடி மக்களின் வயிற்றில் அடிக்காமல், போதுமான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து வேளாண் தொழில் மென்மேலும் சிறந்தோங்கும் வகையில், 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு விலையில்லா மும்முனை மின்சாரத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
விவசாயப் பெருங்குடி மக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கிட, விடியா திமுக அரசை வலியுறுத்தல் !
– மாண்புமிகு கழக இடைக்காலப் பொது செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை. pic.twitter.com/6eKVqSIWrd
— AIADMK (@AIADMKOfficial) March 9, 2023