தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : காயமடைந்தவர்களிடம் வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து கேட்கும் காவல்துறை! பயத்தில் பொதுமக்கள்..!
இன்சூரன்ஸ் கிளைம் வாங்கித் தருகிறோம்; வெள்ளைப் பேப்பரில் கையெழுத்துப்போடுங்கள் என தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களிடம் காவல்துறையினர் கையெழுத்துக் கேட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்று காவல்துறையின் துப்பாக்கிச் சூடு, தடியடியில் தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்த நிஷானி (16), இன்பென்டா (21), மீனவர் காலனியைச் சேர்ந்த பினோலின் பிரியங்கா (19) ஆகியோர் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களிடம் வெள்ளிக்கிழமை இரவு சாதாரண உடையில் சென்ற காவல்துறையினர், இன்சூரன்ஸ் கிளைம் பெற்றுத்தருகிறோம்; வெள்ளைப் பேப்பரில் கையெழுத்துப் போடுங்கள் எனக் கேட்டுள்ளனர்.
இதற்கு மறுப்புத் தெரிவித்த அவர்கள், நாங்கள் என்ன சாலை விபத்தில் காயமடைந்தா சிகிச்சை பெற்று வருகிறோம். காவல்துறையின் தடியடி, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறோம். கையெழுத்தெல்லாம் போட முடியாது எனக்கூறியுள்ளனர்.
வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து போட்டுக்கொடுத்தால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும் என்று காவல்துறைக்கு சொல்லிக் கொடுத்தது யார் என்று தெரியவில்லை. இப்படியொரு அப்பட்டமான பொய்யைச் சொல்லி காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் அப்பாவி மக்கள் எத்தனை பேரிடம் கையெழுத்துப் பெற்றனரோ தெரியவில்லை. இப்படி ஏமாற்றி கையெழுத்து பெற்று காவல்துறை என்ன செய்யப்போகிறதோ தெரியவில்லை.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியும், காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பாவும் காவல்துறை நடவடிக்கை சரியானதுதானா என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும்.