மணீஷ் சிசோடியாவை கொல்ல பிரதமர் மோடியின் கட்சி முயற்சிக்கிறதா..? – சவுரப் பரத்வாஜ்
டெல்லி முன்னாள் துணை முதல்வரைக் கொல்ல பாஜக சதிசெய்கிறதா? என சவுரப் பரத்வாஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவை பிப்.26ஆம் தேதி 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையடுத்து, மணீஷ் சிசோடியாவை மார்ச் 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பிப்.27 முதல் சிபிஐ காவலில் இருந்த மணீஷ் சிசோடியா நேற்று முன்தினம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
துணை முதல்வரைக் கொல்ல பாஜக சதிசெய்கிறதா?
மணீஷ் சிசோடியா, மூத்த குடிமகன் என்ற முறையில் ஒரு தனி நபருக்கான சிறை எண்-1க்குள் அடைக்கப்பட்டுள்ளார் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி செய்தித் தொடர்பாளருமான சவுரப் பரத்வாஜ் கூறுகையில், திகார் சிறைச்சாலையின் சிறை எண் 1ல்தான் கடுமையான குற்றவாளிகள் அடைக்கப்படுவது வழக்கம்.
“ஆபத்தான மற்றும் கடுமையான குற்றவாளிகள் திகார் சிறையின் சிறை எண் 1ல் அடைக்கப்பட்டுள்ளனர். மணீஷ் சிசோடியாவும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி முன்னாள் துணை முதல்வரைக் கொல்ல பாஜக சதிசெய்கிறதா?என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“நாங்கள் பா.ஜ.க.வின் அரசியல் போட்டியாளர். டெல்லியில் ஆம் ஆத்மியை பாஜகவால் தோற்கடிக்க முடியவில்லை. டெல்லி எம்.சி.டி.யில் எங்களை தோற்கடிக்க முடியவில்லை. தோல்விக்கு பிரதமர் மோடி இப்படி பழிவாங்குவாரா? இதைப் பற்றி பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார்? உங்களால் அரசியல் ரீதியாக எங்களை தோற்கடிக்க முடியாத போது, நீங்கள் எங்களை சிறைக்கு அனுப்புவது, எங்கள் தலைவர்களைக் கொல்லும் சதி என்றுதெரிவித்துள்ளார்.
தியான அறை மறுப்பு
முன்னதாக, டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா திகார் சிறையில் மற்ற கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு விபாசனா (தியானம் அறை) அறை மறுக்கப்படுவதாகவும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.