அண்ணாமலைக்கு ஏன் பதற்றம்.? எதுவும் ரகசியம் சிக்கியுள்ளதா.? கடம்பூர் ராஜு கேள்வி.!
பாஜக தலைவர் அண்ணாமலை ஏன் பதட்டமடைகிறார் என தெரியவில்லை. ஏதேனும் ரகசியம் நிர்மல் குமாரிடம் இருக்கிறதா என அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
பாஜகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் அதிமுகவில் இணைந்துள்ளனர். எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்றே கோவில்பட்டியில் பாஜக நிர்வாகிகள் சிலர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவ படத்தை எரித்து, போஸ்டர்கள் ஒட்டியும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். இதனால், அவர்கள் கைதும் செய்யப்பட்டனர்.
அண்ணாமலை பேட்டி :
நேற்று பாஜகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்தது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை ஆற்றுவோம். நானும் ஜெயலலிதா போன்ற ஒரு கட்சி தலைவர் தான். அவர்கள் அளவிற்கு இல்லை என்றாலும் மாநில கட்சியின் தலைவர் நான் என்பது போல பேசி இருந்தார்.
கடம்பூர் ராஜு பேட்டி :
இது குறித்து அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் நேற்று பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், ‘ கடந்த 2019 தேர்தலில் ஒரு நல்ல தலைமை வரவேண்டும் என பாஜகவோடு இணைந்து தேர்தலை சந்தித்தோம். தமிழகத்தில் மாற்று முடிவுகள் வந்தாலும், வாக்கு சதவீதம் அதிகம் பெற்றோம். பாஜகவும் அதிக வாக்கு சதவீதம் எங்களால் தான் பெற்றது. பின்னர் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு பாஜக அவர்கள் பலத்தை தெரிந்து கொண்டார்கள்.
இரட்டை இலைக்கு பின் ஆதரவு :
அதன் பிறகு அதிமுக எங்கள் கூட்டணியில் தான் பாஜக இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுத்தார். இரட்டை இலை சின்னம் கிடைத்த பிறகு அண்ணாமலை எங்களுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். அவரும் 2 நாள் பிரச்சாரம் செய்தார்.
கட்சிக்குள் முரண்பாடு : ஆனால், தற்போது அவர் தேவையில்லாமல் பதட்டப்படுகிறார். ஒரு பாஜக நிர்வாகி இருக்கிறார் என்றால் கட்சியோடோ, தலைவர்களோடோ முரண்பாடு ஏற்பட்டால் அவர்கள் பிரிவது இயல்பு. காயத்ரி ரகுராம் கூட தான் கட்சியை விட்டு விலகுவது அண்ணாமலையால் தான் வெளியில் செல்கிறோம் என கூறிவிட்டு சென்றார். நயினார் நாகேந்திரன் கூட அதிமுகவில் இருந்து பாஜகவில் சேர்ந்தார். 2021 தேர்தல் முடிந்த பிறகு ஒரு அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாஜகவில் இணைந்தார் இது இயல்பு.
நிர்மல் குமார் : அண்மையில், பாஜக நிர்வாகி நிர்மல் குமார் வெளியேறிவிட்டார். அவர் அதிமுகவில் சேர்ந்துள்ளார். நாங்கள் யாரையும் அழைக்கவில்லை. நாங்கள் அவரை ஏற்கவில்லை என்றால், ஒருவேளை சேர்க்க மறுத்து இருந்தால் திமுக சென்று இருப்பார்.
எங்கிருந்தாலும் வாழ்க :
முன்னதாக யார் எங்கு சென்றாலும், எங்கிருந்தாலும் வாழ்க என்றார் அண்ணாமலை. அரசியல் நாகரீகம் தெரிந்துவிட்டார் அண்ணாமலை என நினைத்தேன். அதற்குள் இப்பொது பயப்படுகிறார். இப்போது அண்ணாமலைக்கு பதட்டம் ஏன் என்று தெரியவில்லை. எந்த ரகசியத்தை நிர்மல் குமார் வெளியில் சொல்ல போகிறார் என்று இப்படி பயப்படுகிறார். நங்கள் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை ஆற்றுவோம். என்றெல்லாம் கூறுகிறார்.
தேசிய தலைமைக்கு தெரியும் :
உண்மையில் அவர் எதிர்வினை ஆற்றவேண்டியது திமுகவிடம் தான். யார் பிரதமர் வரக்கூடாது என பேசிய மு.க.ஸ்டாலினிடம், மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறுகிறார்கள் அதற்கு எதிர்வினை ஆற்றிலாம். அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்வது நடக்காது. இந்த நிமிடம் வரை பாஜக கூட்டணியில் தான் இருக்கிறது. கூட்டணி குறித்து முடிவு செய்வது அண்ணாமலை இல்லை. அவர் இல்லை என்றால் வேறு ஒருவர் வருவார். யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என தேசிய தலைமைக்கு தெரியும். அவர்கள் நல்ல முடிவு எடுப்பார்கள். என அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜு தெரிவித்தார்.