சிங்கபெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் – விருது வழங்கி கௌரவித்த முதல்வர்..!
பெண்களை அடிமையாக நினைக்கும் ஆண்களின் சிந்தனை மாற வேண்டும் என முதல்வர் கோரிக்கை
விருது வழங்கிய முதல்வர்
சென்னையில் நடைபெற்ற மகளீர் தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். அதன்படி, அவ்வையார் விருது நீலகிரி கமலம் சின்னசாமிக்கும், பெண் குழந்தை விருது சேலம் இளம்பிறைக்கு வழங்கினார்.
சிறப்பாக செயல்பட்ட மூன்று மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார். அதன்படி திருவள்ளூர் ஆட்சியர் ஜான் வர்கீஸ், நாகை ஆட்சியர் அருண் தம்புராஜ், நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆகியோருக்கு விருது வழங்கினார். கருணை அடிப்படையில் தமிழரசி, சுபா, சோபியா ஹரிணி, ராஜலட்சுமி ஆகியோருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
முதல்வர் உரை
இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பேரன்பிற்குரிய சிங்கப் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள். நாட்டின் வளர்ச்சியில் மகளிர் பங்களிப்பு முக்கியமானது என்பதால் அவர்களை கௌரவிக்க வேண்டியது அவசியம். சங்ககால முதலே பெண்கள் போற்றப்பட்டு வருகிறார்கள். மன்னனையே கேள்வி கேட்கும் துணிச்சல் கண்ணகிக்கு இருந்தது.
அடக்கி ஒடுக்கப்பட்ட பெண்களின் விடுதலைக்காக பாடுபட்டது திராவிட இயக்கம். தந்தை பெரியாருக்கு பெரியார் என பட்டம் தந்தது பெண்கள்தான். பெண்களுக்கு தன்னம்பிக்கை, துணிச்சல், தந்தது திராவிட இயக்கம்தான் என்று தெரிந்து கொள்ள வேண்டும். சமூகநீதி திட்டங்களை திராவிட மாடல அரசு அதிக அளவில் செயல்படுத்தி வருகிறது.
உள்ளாட்சியில் முதன்முறையாக பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தந்தது திமுக அரசு தான். மகளிர் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தோம்.
இலவச பேருந்து பயணத்தின் மூலம் பல லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். எத்தனை லட்சம் இழப்பு என்பதை விட எத்தனை லட்சம் பெண்கள் பயன் அடைகிறார்கள் என்பதே முக்கியம்.
பெண்களை அனைத்து வகைகளும் முன்னேற்றி வருகிறது திராவிட மாடல் அரசு. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் ஒரு பெண் ஓதுவாரும் இடம் பெற்றுள்ளார். வட மாநில பெண் ஒருவர் அடைக்கலம் தேடி வந்த அளவிற்கு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம்.
பெண் என்றால் ஆண்களுக்கு அடிமை என்ற சிந்தனை ஆண்கள் மனதில் இன்னமும் உள்ளது. பெண்களை அடிமையாக நினைக்கும் ஆண்களின் சிந்தனை மாற வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.