தமிழகத்தில் களைகட்டும் ஹோலி பண்டிகை.! கொண்டாட்டத்தில் வடமாநிலத்தவர்கள்.!
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஹோலி பண்டிகையை, வெளிமாநிலத்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
வட மாநிலத்தவர்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில் குறிப்பாக வட மாநிலங்களில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் விழாக்களில் மிக முக்கியமானது ஹோலி பண்டிகை. அன்றைய தினம் வண்ண வண்ண கலர் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசி தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இது ஆன்மீக ரீதியாகவும் கொண்டாடப்படுகிறது. அதே போல பனிக்காலம் முடிந்து கோடை காலம் வருவதை வரவேற்கவும் கொண்டாடப்படுகிறது.
ஹோலி பண்டிகை :
இந்த பண்டிகையானது முன்னர் வடமாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுவதை செய்தி வாயிலாக கண்டு ரசித்து இருப்போம். தற்போது இந்த ஹோலி பண்டிகையானது தமிழகத்திலும் கோலாகலமாக பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
களைகட்டும் ஹோலி :
தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்களில் வடமாநிலத்தவர்கள் வேலை செய்து வருவதால், அவர்கள் வசிக்கும் பல்வேறு இடங்களில் ஹோலி பண்டிகையானது நேற்று முதல் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.
சென்னை – திருப்பூர் :
தலைநகர் சென்னையில் தண்டையார்பேட்டை , சௌகார்பேட்டை உள்ளிட்ட வடமாநிலத்தவர்கள் வசிக்கும் பல்வேறு இடங்களிலும், திருப்பூர் பகுதியில் ராயபுரம், காதர்பேட்டை, ஸ்டேட் பாங்க் காலனி, சித்தப்பா அவென்யூ உள்ளிட்ட பகுதிகளிலும் வடமாநிலத்தவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை வீசி கொண்டாடி வருகின்றனர்.
ஈரோடு :
அதே போல, ஈரோடு மாவட்டத்தில் , பெருந்துறை, மொடக்குறிச்சி ஆகிய பகுதிகளிலும், ஈரோடு மாநகரில் இந்திரா நகர் கருங்கல்பாளையம், கே.எஸ்.நகர் திருநகர் காலனி, வளையக்கார வீதி, விவிசிஆர் நகர், அக்ரஹார வீதிகளிலும் வடமாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகையை வெகு விமர்சையாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.