போட்டிபோட்டு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவிகள்..! 4 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
ஊட்டியில் போட்டிபோட்டு சத்து மாத்திரை சாப்பிட்ட 4 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஊட்டியில் உள்ள அரசு உருதுப் பள்ளியில் நான்கு மாணவிகள் போட்டி போட்டு சத்து மாத்திரை சாப்பிட்டதால் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓவ்வொரு அரசு பள்ளிக்கும் தினசரி நுகர்வுக்காக மாணவர்களுக்கு சுகாதாரத் துறை மூலம் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஊட்டியில் உள்ள அரசு உருதுப் பள்ளியில் இரும்புச்சத்து மற்றும் சத்து மாத்திரை வழங்கப்பட்டது. இப்பள்ளியில் 249 மாணவ, மாணவியர் படிக்கும் நிலையில் மாணவர்களுக்கு தலா 50 மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த மாத்திரைகளை ஒரு நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் உட்கொள்ள வேண்டும்.
ஆனால் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவிகள், யார் அதிக மாத்திரைகளை உட்கொள்கிறார்கள் என்று போட்டி போட்டு தொடர்ந்து மாத்திரைகளை சாப்பிட்டுள்ளனர். இதனால் வகுப்பறையில் நான்கு மாணவிகளும் மயங்கி விழுந்துள்ளனர். வகுப்பறையில் மயங்கி விழுந்த சிறுமிகளை ஆசிரியர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.