உயர் பதவியில் இருப்பவர்கள் பொறுப்பாக பேச வேண்டும்-நாராயணசாமி பேட்டி..!
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது. வாரியத்தில் மத்திய அரசின் பிரதிநிதிகள், 4 மாநில பிரதிநிதிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் இடம்பெறுகின்றனர். இது பல ஆண்டாக தமிழகமும், புதுவையும் நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.
உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும்கூட கர்நாடக தேர்தலைமையமாக வைத்து பா.ஜனதா மேலாண்மை வாரியம் அமைப்பதை காலதாமதம் செய்து வந்தது. அதோடு வாரியத்திற்கு அதிகாரம் இல்லாமல் நீர்த்துப்போகச்செய்யும் வகையில் வாரியம் அமைப்பதற்கான வரைவு திட்டத்தையும் வெளியிட்டது. இதை புதுவை அரசு கடுமையாக எதிர்த்தது. புதுவைக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடிய வக்கீல் நம்பியார் முழு அதிகாரம் கொண்ட வாரியத்தை அமைக்க வேண்டும் என வாதிட்டார். இதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. வாரியம் அமைத்ததால் காரைக்காலுக்கு காவிரி நீர் கிடைக்கும். எப்போது திறந்துவிட வேண்டும் என்பதை வாரியம் முடிவு செய்யும்.
2 நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் 10 சட்ட மன்ற தொகுதி, 2 எம்.பி. தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் பா.ஜனதா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மதச்சார்பற்ற அணிகள் ஒருங்கிணைந்தால் பா.ஜனதா வீழ்ச்சி உறுதி என்பது தெளிவாகியுள்ளது. மதச்சார்பற்ற அணிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் ராகுல்காந்தி ஈடுபட்டுள்ளார். 2019ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும்.
ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி மக்கள் 13 பேர் இறந்துள்ளனர். தமிழக காவல்துறை அப்பாவி மக்களை சுட்டுக்கொன்றதை ஏற்க முடியாது, கண்டிக்கத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று தேசவிரோத சக்திகள் நுழைந்து கலவரத்தை ஏற்படுத்தியதாக கருத்து கூறியுள்ளார். இந்த கருத்து அப்பகுதி மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. இந்த கருத்து ஏற்புடையதல்ல. இதற்கு ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவர் பெருந்தன்மையானவர் என்றால்அவர் கூறிய கருத்தை திரும்பப்பெற வேண்டும். மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது. ஆதாரமில்லாமல் ரஜினி பேசுவது யாரோ அவரை பின்புறம் இருந்து இயக்குகிறார்களோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய அரசே பெட்ரோல் விலையை நிர்ணயித்தது. பா.ஜனதா பெட்ரோலிய நிறுவனங்கள் விலையை நிர்ணயிக்க வழி செய்தது. இதனால் நாள்தோறும் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. எங்கள் ஆட்சியில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை, கியாஸ் ஆகியவற்றுக்கு மானியம் அளித்தோம். சமீபத்தில் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.46 உயர்ந்துள்ளது. 4 ஆண்டில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் மூலம் மத்திய அரசு ரூ.10 லட்சம் கோடி சம்பாதித்துள்ளது. இது மக்கள் பணத்தை கொள்ளையடித்ததற்கு சமம். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். மத்திய பா.ஜனதா அரசு மீது கோபத்தில் உள்ளனர். நாட்டில் புதுவையில்தான் குறைந்த விலையில் பெட்ரோல் விற்கப்படுகிறது.
கிழக்கு கடற்கரை சாலையை நான்குவழி சாலையாக மாற்றும் பணி மகாபலிபுரம் வரை நிறைவடைந்துள்ளது. மகாபலிபுரத்திலிருந்து விழுப்புரம் வரை அடுத்தகட்டமாக 4 வழி சாலை விரிவடையவுள்ளது. இந்த சாலை பல்கலைக்கழகத்தின் பின்புறம் ஊசுடு, உளவாய்க்கால், நவமால்காப்போர் வழியாக விழுப்புரத்திற்கு செல்லும். நாகையிலிருந்து விழுப்புரம் வரும் சாலையுடன் அது இணையும். இதனால் சென்னைக்கு தற்போது இரண்டரை மணி நேர பயணம் ஒன்றரைமணி நேரமாக குறையும். இந்த சாலை பல்கலைக்கழகத்திற்கு முன்புறம் வந்தால் குடியிருப்புகள் பாதிப்படையும் என்பதால் பின்புறம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
பேட்டியின்போது துணை சபாநாயகர் சிவகொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன் ஆகியோர் உடனிருந்தன