தமிழறிஞர்களுக்கு திங்கள்தோறும் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
விண்ணப்பங்கள் வரவேற்பு:
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள்தோறும் உதவித் தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2022-2023 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கத் தகுதிகள்:
01.01.2022-ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72.000/-க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணைய வழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று, தமிழறிஞர்கள் 2 பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
இதற்கான விண்ணப்பப்படிவம் தமிழ் வளர்ச்சித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணைய முகவரியில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். தகுதியடைய நபர்கள் மார்ச் 31க்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம் என கூறப்பட்டுள்ளது.
திங்கள்தோறும் உதவித்தொகை:
இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3500, மருத்துவப்படி ரூ.500 வழங்கப்படும். விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டங்களில் மாவட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்கள், மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகங்கள் வாயிலாக மட்டுமே அணுப்பப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களிலிருந்து நேரடியாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.