35 நாட்களில் 3 திரைப்படங்கள்…மாஸ் காட்டும் பிரியா பவானி சங்கர்.!
சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். ஆரம்ப காலகட்டத்தில் சீரியல்களில் நடித்து வந்த நிலையில், இவர் தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல பெரிய படங்களில் நடித்து வருகிறார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு ஜெயம்ரவி, சிம்பு, லாரன்ஸ், கமல்ஹாசன் என டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
அதன்படி, தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அருள் நிதிக்கு ஜோடியாக டிமாண்டி காலனி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களில் தற்போது பிரியா பவானி சங்கர் பிஸியாக இருக்கிறார்.
இதற்கிடையில், பிரியா பவானி சங்கர் நடித்து முடித்துள்ள 3 படங்கள் தொடர்ச்சியாக 35 நாட்களில் வெளியாகவுள்ளது. என்னென்ன படங்கள் என்பதை பற்றி பார்க்கலாம். அதன்படி, முதல் படமாக வரும் மார்ச் 10-ஆம் தேதி ஜெயம் ரவிக்கு அவர் ஜோடியாக நடித்துள்ள “அகிலன்” திரைப்படம் வெளியாகிறது.
அதனை தொடர்ந்து அடுத்ததாக மார்ச் 30-ஆம் தேதி சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள “பத்து தல” படம் வெளியாகிறது. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு ஜோடியாக நடித்துள்ள “ருத்ரன்” திரைப்படம் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது. தொடர்ச்சியாக 3 படங்கள் 35 நாட்களில் வெளியாகவுள்ளது என்பதால் பிரியா பவானி சங்கர் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.