10 வருடங்களாக பிரச்சனை எதுவும் இல்லை- வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து எஸ்.பி விளக்கம்.!
வெளி மாநிலத்தொழிலாளர்களுக்கு திருச்சியில் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று எஸ்.பி விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ சமூக வலை தளங்களில் கடந்த சில நாட்கள் முன்பு பரவியதால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில அரசியல் கட்சியினர் இது குறித்து சட்டசபையில் கேள்வியெழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
பீகாரில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழ்நாட்டிற்கு ஆய்வுக்குழு அனுப்பப்பட்டது. மேலும் தமிழக காவல்துறையும் இந்த போலி வீடியோ குறித்து விளக்கம் அளித்திருந்தது, இந்த வீடியோ வேறு மாநிலங்களில் நடந்த பழைய வீடியோ என்றும், இது முற்றிலும் உண்மையில்லை. மேலும் இது போன்று தவறான தகவல்களை பரப்புவோர் மீது 7 ஆண்டுகள் சிறை உள்ளிட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்த விவகாரம் குறித்து தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுவரும் நிலையில், திருச்சி மாவட்ட எஸ்.பி சுஜித் குமார் வடமாநில தொழிலாளர்கள் திருச்சியில் பாதுகாப்பாகவே இருக்கின்றனர் என்று கூறினார்.
மேலும் இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் வேறுமாநில தொழிலாளர்கள் கூறிய பதிலில் தாங்கள் இங்கு 5 முதல் 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறோம், பாதுகாப்பாகவே உணர்கிறோம் எங்களுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை என்று கூறியுள்ளனர் என சுஜித் குமார் விளக்கம் அளித்துள்ளார்.