வதந்திகளை நம்ப வேண்டாம்! இரு மாநில நல்லுறவை கெடுக்க முயற்சி – சிராக் பஸ்வான் பேட்டி!
பீகார் மாநில தொழிலாளர்களை சந்திக்க சென்னை வந்துள்ள லோக் ஜன சக்தி கட்சித் தலைவர் சிராக் பஸ்வான் பேட்டி.
வடமாநிலத்தவர் விவகாரம்:
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோ சமூக வலை தளங்களில் கடந்த சில நாட்கள் முன்பு பரவியதால் பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சியினர் அங்குள்ள சட்டசபையில் இதுகுறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். ஆனால், தமிழக அரசும், காவல்துறையும் மறுப்பு தெரிவித்து, வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
உண்மையை கேட்டறிந்த அதிகாரிகள்:
அதுமட்டுமில்லாமல் வதந்திகளை பரப்பியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்ய தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ போலியானது என பீகார் துணை முதல்வர் கூறியிருந்தார். இதுபோன்ற போலியான வீடியோ, பாஜகவினர் திட்டமிட்டு பரப்புவதாக குற்றசாட்டினார். இருப்பினும், உண்மை நிலையை கண்டறியும் வகையில் பீகாரில் இருந்து உயர் அதிகாரிகள் சென்னை வந்து தமிழக அதிகாரிகளிடம் நடந்த விசயங்களை கேட்டறிந்தனர்.
வதந்திகளை நம்பாதீர்:
இதையடுத்து, பீகாரில் இருந்து லோக் ஜன சக்தி கட்சித் (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பஸ்வான் எம்.பி. இன்று விமானம் மூலம் சென்னை வந்த அவர், பல்லாவரம், தாம்பரம் மற்றும் புறநகரில் உள்ள பீகார் தொழிலாளர்களை சந்தித்து தமிழகத்தில் நிலவும் நிலைமைகளை குறித்து கேட்டறிந்தார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிராக் பஸ்வான் எம்.பி., சமூக வலைத் தளங்களில் பரவும் வதந்திகளை வடமாநில தொழிலாளர்கள் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தினார்.
நல்லுறவை கெடுக்க முயற்சி:
இந்தியாவில் எந்த இடத்திலும் பணியாற்ற அனைவருக்கும் உரிமை உள்ளது. பீகார் – தமிழ்நாடு இடையே நிலவும் நல்லுறவை கெடுக்க சிலர் முயற்சி செய்கின்றனர். சமூக வலைத்தளத்தில் போலி தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்து ஆதாரங்கள் என்னிடம் உள்ளன, மக்கள் கூறுவதை மட்டுமே நான் நம்புவேன் என கூறினார்.
கவர்னரை சந்திக்கும் சிராக் பஸ்வான்:
வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரவி வரும் நிலையில், சிராக் பஸ்வான் தொழிலாளர்களை சந்தித்தபின் பேட்டியளித்துள்ளார். சிராக் பஸ்வான் இன்று மதியம் ஒரு மணிக்கு கவர்னரை சந்தித்து பீகார் தொழிலாளர்கள் பாதுகாப்பு சம்பந்தமாக மனு கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.