GGvsMI : மகளிர் ஐபிஎல்-இன் முதல் போட்டியில் மும்பை அணி அபார வெற்றி..!
முதல் போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது மும்பை அணி.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் ஆட்டத்தில் 143 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது மும்பை அணி. முதல் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யாஸ்திகா பாட்டியா மற்றும் ஹேலி மேத்யூஸ் களமிறங்கினர். இந்த போட்டியில் அதிகபட்சமாக ஹெய்லி மேத்யூஸ் 47 ரன்களும், ஹர்மன்ப்ரீத் கவுர் 65 ரன்களும், அமெலியா கெர் 45* ரன்களும் எடுத்திருந்தனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது.
208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மேகனா மற்றும் அணியின் கேப்டன் பெத் மூனி களமிறங்கினர். மும்பை அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் 4 பந்தில் 2 ரன்கள் எடுத்து மேகனா ஆட்டமிழந்தார். குஜராத் அணியின் கேப்டன் பெத் மூனி காயம் ஏற்பட்டு ரிட்டையர்டு ஹர்ட் (retd hurt) ஆனது அணிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. இவர்களையடுத்து களமிறங்கிய ஹர்லீன் தியோல், ஆஷ்லே கார்ட்னெர்க், அன்னாபெல் சதர்லேண்ட் (6 ரன்கள்) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
பின்னர் தயாளன் ஹேமலதா களமிறங்கி அணிக்கு ரன்களை (29* ரன்கள்) குவிக்க முயற்சி செய்தார். இருந்தும் அவரால் இலக்கை அடைய முடியவில்லை. மும்பை அணியின் அபார பந்துவீச்சால் குஜராத் அணி தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்அவுட் ஆனது. மும்பை அணி முதல் போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது. இதில் சைகா இஷாக் 4 விக்கெட்டுகளும், அமெலியா கெர் மற்றும் நாட் ஸ்கிவர்-பிரண்ட் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியின் ஆட்டநாயகியாக ஹர்மன்ப்ரீத் கவுர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.