ஒரு முறை அல்ல,6-வது முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பூம் பூம் வீரர்!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி , சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார். இவ்வாறு அப்ரிடி அறிவிப்பது 6-வது முறையாகும். ஆனால், இந்த முறை கிரிக்கெட் விளையாட இனி வரமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
லண்டனில் நேற்று முன்தினம் நடந்த மேற்கிந்தியத்தீவுகள், ஐசிசி வேர்ல்டு லெவன் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது, அப்பிரிடிக்கு அனைத்து வீரர்களும் பிரியாவிடைகொடுத்து, மரியாதை செய்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் நாட்டில் கிரிக்கெட் அரங்குகள் மேம்பாட்டுக்காக நடத்தப்பட்ட நலநதிக் கிரிக்கெட் போட்டி தொடங்கும் முன்புதான் ஷாகித் அப்ரிடி தனது முடிவை அனைவருக்கும் அறிவித்தார். இதற்கு முன் பாகிஸ்தான் அணியில் இருந்து பலமுறை ஓய்வு பெறுவதாக அறிவித்தும் மீண்டும், மீண்டும் தனது முடிவை மாற்றி அப்ரிடி விளையாடி இருந்தார். ஆனால், இந்த முறை, சர்வதேச போட்டிகளில் இதுவே எனது கடைசிபோட்டியாகும் என உருக்கமாகத் தெரிவித்தார்.
போட்டியின் நடுவே களத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்த அப்ரிடியிடம், வர்ணனையாளர் நாசர் ஹூசைன், இந்தப் போட்டியை குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள், சர்வதேச போட்டிகளுக்கு மீண்டும் திரும்புவீர்களா? எனக் கேட்டார்.
அப்போது, அதற்கு அப்ரிடி பதில் அளிக்கையில், சர்வதேச போட்டிகளில் நான் பங்கேற்கும் கடைசி போட்டி இதுவாகத்தான் இருக்கும். அதிகமான வயது, காயத்தால் இனிஎன்னால் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்த இயலாது. அதனால், இதுதான் நான் விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாக இருக்கும். அதிலும் கிரிக்கெட்டின் தாய் என அழைக்கப்படும் லண்டன் நகரில் எனது கடைசிப் போட்டியை நான் விளையாடுவது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி கடந்த 2006-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், அறிவித்த 2 வாரங்களில் தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடினார். 2010-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அப்ரிடி அறிவித்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக அப்போது அப்ரிடி அறிவித்தார். ஆனால், அறிவித்து 5 மாதங்களில் மீண்டும் சர்வதேச போட்டிகளிலும், உள்நாட்டுப் போட்டிகளிலும் விளையாடத் திரும்பி வந்தார்.
அதன்பின் 2015-ம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அப்ரிடி இறுதியாக அறிவித்தார். கடந்த 2017-ம் ஆண்டு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால், 15 மாதங்களுக்குப் பின் மீண்டும் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடினார். 2018-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக இறுதியாக அப்ரிடி அறிவித்துள்ளார்.
அப்ரிடி இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,716 ரன்கள் சேர்த்துள்ளார். 5 சதங்கள், 8 அரைசதங்கள் அடங்கும். 398 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அப்ரிடி 6 சதம், 39 அரைசதம் உள்ளிட்ட 8064 ரன்கள் குவித்துள்ளார். 99 டி20 போட்டிகளில் விளையாடிய அப்ரிடி 4 அரைசதம் உள்ளிட்ட 1916 ரன்கள் சேர்த்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.