ஓபிஎஸ்-க்கு தகுதி, திறமை இருந்தால் இபிஎஸ்-யோடு மோதிப் பார்க்கட்டும் – ஜெயக்குமார் கண்டனம்
ஓ.பன்னீர்செல்வத்தின் விமர்சனதுக்கு பதிலடி தரும் வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு 43,981 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்து, கண்டனம் தெரிவித்திருந்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக படுதோல்வி அடைந்ததற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுகவின் தனித்தன்மையை சீர்குலைக்கவும், திமுகவிடம் அடகு வைக்கவும் முயற்சிக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கண்டனம். ஈரோடு கிழக்கு தொகுதியில் முறையாக ஒரு வேட்பாளரை நிறுத்த முடியாத காகிதப்புலி ஓபிஎஸ். தகுதி, திறமை இருந்தால் தனிக்கட்சி தொடங்கி எடப்பாடி பழனிசாமியோடு மோதிப் பார்க்கட்டும் என சவால் விடுத்துள்ளார்.
இதுவரை ஓபிஎஸ் பற்றி தவறாக ஒரு வார்த்தைகூட அண்ணன் எடப்பாடியார் அவர்கள் பேசியதில்லை. இவர் செய்த பல்வேறு துரோகங்களை பெரிதுபடுத்தாமல், இந்த இயக்கத்தை கட்டிக் காக்கும் வேளையில் ஈடுபட்டு வருகிறார். தனி மனித தாக்குதலில் ஈடுபடுதல், கைகட்டி வேடிக்கை பார்க்க உண்மையான அதிமுக தொண்டர்கள் கோழைகள் அல்ல என்று எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.