தான் என்ற அகம்பாவம்! துதிபாடும் கூட்டம்.. படுதோல்விக்கு இபிஎஸ் தான் காரணம் – ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை!

Default Image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு இபிஎஸ் தான் காரணம் என ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை.

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் என்ற அகம்பாவத்தில், ஆணவத்தில் கழகத்திற்காக உழைத்தவர்களை, தியாகம் செய்தவர்களை, அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்களை எல்லாம் கட்சியிலிருந்து வெளியேற்றி, ஒரு துதிபாடும் கூட்டத்தை தன் பக்கத்தில் வைத்துக்கொண்டு மனம்போன போக்கில் செயல்பட்டு வருகின்ற காரணத்தால்தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் படு தோல்விக்கு காரணம்.

ஒரு கட்சியினுடைய வலிமை அதனுடைய சுயபலத்தில் இல்லை. அந்தக் கட்சியை எதிர்க்கின்ற எதிர்கட்சிகளின் வலிவின்மையில்தான் இருக்கிறது” என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். நேற்றைய ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் முடிவு இதைத்தான் உணர்த்தியுள்ளது. அதிமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை உருவாக்கி, 10 காலம் தமிழ்நாட்டிற்கு பொற்கால ஆட்சியை அளித்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.

புரட்சி தலைவர் உருவாக்கிய இயக்கத்தை கட்டிக் காத்து, பல்வேறு நலத் திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு அளித்து, தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்த பெருமைக்குரியவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அம்மா அவர்களின் அர்ப்பணிப்புப் பணிதான் அதிமுக இந்திய நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சி என்ற நிலைக்கு எடுத்துச்சென்றதோடு, 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆண்ட கட்சியே தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க வழிவகுத்தது.

மக்களுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து கழகத்தை உச்ச நிலைக்கு எடுத்துச் சென்றவர். இப்படிப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கத்தினை, தொண்டர்கள் இயக்கத்தினை உருவாக்கிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலும், கழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகழுக்கு பங்கம் ஏற்படும் வகையிலும், அண்மையில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் முடிவு அமைந்துள்ளது.

இந்தத் தோல்வி ஒவ்வொரு தொண்டனையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. பல காரணங்களால் பொதுமக்கள் திமுக அரசின்மீது மிகுந்த  அதிருப்தியில் இருப்பதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி வாய்ப்பினை பெறாமல், வரலாறு காணாத படுதோல்வியை அதிமுக அடைந்திருக்கிறது. அதற்குக் காரணம் கழகத்திற்காக உழைத்தவர்களை உதறித் தள்ளியது, பணத்தால் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முனைந்தது போன்ற நம்பிக்கைத் துரோகங்கள்தான்.

இவற்றைப் பார்க்கும்போது, பொதுப் பணி என்ற பெயரால் தான் பெற்ற செல்வாக்கை, பணப் பெட்டியை நிரப்பும் வழியாக உபயோகிப்பவன், மக்களால் வெறுக்கப்படுவான் என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிதான் நினைவிற்கு வருகிறது. 2021ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கிட்டத்தட்ட 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தற்போது கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இதை பார்க்கும்போது பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வலுவிழந்த நிலையில் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது.

வரலாற்றில் ஓர் இடைத் தேர்தலில் அதிமுக கிட்டத்தட்ட 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது இந்த இடைத் தேர்தல் தான். இதற்குக் காரணம், துரோகியும், துரோகியின் தலைமையிலான ஓர் சர்வாதிகாரக் கூட்டமும் தான். நீதியும், நேர்மையும் தவறாமல் நடுநிலையோடு சிந்தித்து தர்மத்தின் பக்க்கம் நிற்கும் எம்.ஜி.ஆரின் தொண்டர்கள், அம்மாவின் தொண்டர்கள் களத்தில் இறங்கி, தங்கள் நியாயத்தை உணர்த்த வேண்டிய தருணம் இது.

கழகத் தொண்டர்களின் ஆதரவோடு, பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற்று, ஜனநாயக வழியில், கட்சியின் அடிப்படை சட்ட திட்ட விதிகளைக் காப்பாற்றி, அனைவரையும் ஒருங்கிணைத்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில் கட்சியை வழி நடத்திச் செல்லவும், வருகின்ற மக்களவைத் தேர்தலில் நாற்பது இடங்களிலும் கழகம் வெற்றி பெறவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இனி வருங்காலங்களில் விரைந்து எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்