ஈரோடு கிழக்கில் போட்டியிட்ட 77 வேட்பாளர்களில் 75 பேர் டெபாசிட் இழப்பு!
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட 77 வேட்பாளர்களில் 75 பேர் டெபாசிட்டுக்கு தேவையான வாக்குகளை பெறவில்லை.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவை அடுத்து, கடந்த 27-ஆம் தேதி அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா, தேமுதிக வேட்பாளர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 77 பேர் களம் கண்டனர்.
வாக்கு எண்ணிக்கை:
இதையடுத்து, கடந்த ஒரு மாதம் காலமாக நடந்து வந்த அனல்பறக்கும் பிரச்சாரம் கடந்த 25-ஆம் தேதி மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதன்பின்னர் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 15 சுற்றுகளாக எண்ணப்பட்டு, முடிவும் அறிவிக்கப்பட்டது.
வாக்கு சதவீதம்:
இடைத்தேர்தலில் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இபிஎஸ் அணி அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு 43,553 வாக்குகளே மட்டுமே கிடைத்து டெபாசிட்டை தக்க வைத்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 74.79% வாக்குகள் பதிவாகின. இதில், காங்கிரஸ் 64.58%, அதிமுக 25.75%, நாம் தமிழர் 6.35%, தேமுதிக 0.84%, நோட்டா 0.47% வாக்குகள் பெற்றுள்ளன.
டெபாசிட் இழந்த வேட்பாளர்கள்:
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட 77 வேட்பாளர்களில் 75 பேர் டெபாசிட்டை இழந்துள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு ஆகிய இருவர் மட்டுமே டெபாசிட்டுக்கு தேவையான வாக்குகளை பெற்றன.
டெபாசிட் பெற 28,365 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் அதைவிட அதிகம் பெற்றுள்ளார் அதிமுக வேட்பாளர் தென்னரசு. மற்ற பிரதான அரசியல் கட்சிகளான நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் டெபாசிட்டை இழந்துள்ளனர். மேலும், 14 சுயேட்சை வேட்பாளர்கள் ஒற்றை இலக்கத்தில் வாக்குகள் பெற்றுள்ள நிலையில், 2 பேர் தலா 3 ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளனர்.