ஜம்மு-காஷ்மீரில் போராட்டக்காரர்கள் சி.ஆர்.பி.எஃப் வாகனம் ஏறியதில் ஒருவர் பலி..!
ஜம்மு-காஷ்மீரில் போராட்டக்காரர்கள் சி.ஆர்.பி.எஃப் வாகனம் ஏறியதில் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் அருகே உள்ள நவ்ஹட்டா பகுதியில், இளைஞர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சி.ஆர்.பி.எஃப் வாகனமானது தற்செயலாக போராட்டக்காரர்களின் கூட்டம் நிறைந்த ஒரு பகுதிக்குள் நுழைந்துள்ளது. இதைக்கண்ட அவர்கள், சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் வாகனத்தை சுற்றிவளைத்து தாக்க முற்பட்டனர். போராட்டக்காரர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக வாகனம், முன்னோக்கி செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில், போராட்டக்காரர்கள் 3 பேர் மீது சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் வாகனம் ஏறி இறங்கியது. இதனையடுத்து படுகாயமடைந்த மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்ற வாகனம் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி முற்றுகையிட்டு தாக்க முற்படுவது போன்ற காட்சிகளும், இளைஞர்கள் மீது வாகனம் ஏறிச்செல்லும் புகைப்படங்களும் சமூகவலைதளங்களில், வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் சி.ஆர்.பி.எஃப் வாகனம் ஏறியதில் பலத்த காயமடைந்த ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது