சாகர்திகி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தொடர் முன்னிலை..! கொண்டாடும் தொண்டர்கள்..!
மேற்கு வங்க மாநிலம் சாகர்திகி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை.
மேற்கு வங்க மாநிலம் சாகர்திகி தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சாகர்டிகி சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 73 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. 2011 முதல் சாகர்டிகி தொகுதியில் வெற்றி பெற்று வரும் டிஎம்சி கட்சி, 2021ல் கிட்டத்தட்ட 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இது மொத்த வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் ஆகும். அதேசமயம் பாஜக மற்றும் காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி 24 சதவீதத்தைப் பெற்றிருந்தது. இந்நிலையில் தற்பொழுது நடைபெற்று வரும் சாகர்திகி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பைரன் பிஸ்வாஸ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
இதில் காங்கிரஸ் வேட்பாளர் பைரன் பிஸ்வாஸ் 20,996 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (டிஎம்சி) வேட்பாளர் தேபாஷிஷ் பானர்ஜி, 49,607 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார். பாஜகவின் வேட்பாளர் திலீப் சாஹா, 20,211 வாக்குகள் பெற்றுள்ளார். சாகர்திகி இடைத்தேர்தலில் தொடர் முன்னிலை அடுத்து, காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் மேற்கு வங்க மாநிலம் சாகர்திகி சட்டமன்றத் தொகுதியில் 51 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது.