அந்த 15 பேரின் மரணத்திற்கு ஆளுநர் ரவிதான் காரணம்.! அன்புமணி ராமதாஸ் குற்றசாட்டு.!
ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 3 மாதத்தில் உயிரிழந்த 15 பேரின் மரணத்திற்கு ஆளுநர் ரவி தான் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் விமானநிலைய விரிவாக்கம், ஆன்லைன் சட்ட மசோதா, அதானி விவகாரம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
சேலம் விமான நிலையம் : அவர் குறிப்பிடுகையில், சேலம் விமான நிலையத்தினை விரிவுபடுத்த, அதனை மேம்படுத்த ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால், இன்னும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவும்,
ஆளுநர் ரவி : ஆன்லைன் சூதாட்டத்திற்கு சட்டசபையில் மசோதா நிறைவேற்றியும் இன்னும் ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திடாமல் இருக்கிறார். அவசர சட்டத்திற்கு கையெழுத்திட்ட ஆளுநர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு கையெழுத்திடாமல் இருப்பது ஏன் என தெரியவில்லை எனவும்,
15 பேர் மரணம் : ஒருவேளை ஆன்லைன் சூதாட்ட கம்பெனிக்கும் ஆளுநருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை குறித்தும் யோசிக்க வைக்கிறது. மேலும், சட்டம் நிறைவேற்ற பட்டு, 3 மாதங்களில் இதுவரை 15 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் மரணித்துள்ளனர். இதற்கெல்லாம் ஆளுநர் தான் காரணம் என குற்றம் சாட்டினார்.
அதானி குழும முறைகேடு : அடுத்ததாக அதானி விவகாரம் குறித்து பேசுகையில், அதானியின் வளர்ச்சி நம்பகத்தன்மையுடன் இல்லை என நான் ஏற்கனவே கூறிவிட்டேன். இதில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பொதுமக்கள் பணம் 12 அரை லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அதே போல, அதானி குழுமத்தால் எல்ஐசி 55 ஆயிரம் கோடி ரூபாயை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இழந்துள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.