எங்களை ஏமாத்திட்டாங்க… வடிவேலு, தேவாவுக்கு போலி டாக்டர் பட்டம்.? அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்.!
கடந்த ஞாயிற்று கிழமை அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த போலி டாக்டர் பட்ட விழா குறித்து புகார் அளிக்க உள்ளதாக துணை வேந்தர் வேல்ராஜ் குறிப்பிட்டார்.
கடந்த ஞாயிற்று கிழமை மதியம் அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சினிமா பிரபலங்கள் வடிவேலு, தேவா உள்ளிட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த பட்டங்கள் போலி என புகார் எழுந்தது.
போலி கடிதம்.? : இந்த புகாரை தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் அவர்கள் தான் சிறப்பு விருந்தினர் என கூறி அவர் கையெழுத்திட்டதாக ஒரு கடிதத்தை எங்களிடம் கொடுத்துள்ளனர். அதனை வைத்து தான் நாங்கள் இந்த விழா நடத்த அனுமதி அளித்தோம்.
புகார் : அதே போல, அண்ணா பல்கலைகழகத்தில் விழா நடத்தவுள்ளதாக கூறி முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் அவர்களையும் இங்கு வரவழைத்துள்ளனர். அதேபோல இங்கு அதிக ஆசிரியர்கள் இல்லாத நேரம் பார்த்து ஞாயிறு பிற்பகல் இந்த விழாவை நடத்தியுள்ளனர் என கூறினார். மேலும் இந்த போலி டாக்டர் பட்டம் கொடுத்தது தொடர்பாக நாங்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்க உள்ளோம். அதே போல, உயர்கல்வித்துறை மற்றும் ஆளுனரிடமும் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க கோர உள்ளோம் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் குறிப்பிட்டார்.