சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் மோடி ஆகியோருக்கு இடையே நடந்த சந்திப்பின்போது 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின..!
இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 5 நாள் பயணமாக கடந்த 29-ந்தேதி புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் சிங்கப்பூர் போய் சேர்ந்தார். நேற்று அவர் அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகளில் பரஸ்பர நலன்கள், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நட்புறவு கடற்சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தினர். மேலும் இருநாடுகளுக்கு இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தையும் அவர் கள் மறுஆய்வு செய்தனர்.
இறுதியில் இரு நாடுகளுக்கு இடையே கடற்படை தளவாட ஒத்துழைப்பு உள்பட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து போடப்பட்டன. பின்னர் இரு தலைவர்களும் கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர். அதில், ‘வருகிற நாட்களில் சைபர் பாதுகாப்பு, பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பே பிரதானமாக இருக்கும்’ என பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இதைப்போல இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு உறவுகள் வலுவாகி இருப்பதாக பாராட்டியுள்ள லூங், இரு நாட்டு கூட்டு கடற்பயிற்சியின் 25-வது ஆண்டு கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு நடைபெறும் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த சந்திப்பின் போது 6-வது நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிற்பம் ஒன்றை சிங்கப்பூர் பிரதமருக்கு மோடி பரிசளித்தார். இந்தியாவில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு புத்தமதம் பரவியதை நினைவுகூரும் வகையில் இந்த பரிசை அவர் வழங்கினார்.
பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி, சிங்கப்பூர் முன்னாள் தூதர் டாமி கோவுக்கு (வயது 80) இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தார். அமெரிக்கா மற்றும் ஐ.நா.வுக்கான சிங்கப்பூர் தூதராக பணியாற்றி இருக்கும் இவர், அமெரிக்கா-சிங்கப்பூர் இடையிலான தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்தியா ஆசியான் கூட்டமைப்பின் வெள்ளிவிழா ஆண்டையொட்டி கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு இந்த விருதை அறிவித்து இருந்தது.