டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும் மணீஷ் சிசோடியா… 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!
டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.
டெல்லி மதுக்கொள்கை விவகாரம்:
டெல்லி மதுக்கொள்கை விவகாரம் தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று மத்திய புலனாய்வு சிபிஐ முன்பு விசாரணைக்கு ஆஜராக உள்ளார். மணீஷ் சிசோடியா கைது செய்யப்படுவார் என்ற அச்சத்திற்கு மத்தியில் மத்திய டெல்லியின் லோதி சாலையில் உள்ள சிபிஐ தலைமையகத்திற்கு இன்று காலை 11 மணிக்கு அவர் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஐ விசாரணை:
டெல்லி அமைச்சரவையில் நிதி இலாகாவையும் வைத்திருக்கும் சிசோடியா, முதலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரவழைக்கப்பட்டார், ஆனால் அவர் தற்போதைய பட்ஜெட்டை மேற்கோள் காட்டி தனது விசாரணையை ஒத்திவைக்க கோரினார், அதைத் தொடர்ந்து, பிப்.26ம் தேதி இன்று அவரை ஆஜராகுமாறு சிபிஐ கூறியது.
சிசோடியா அச்சம்:
சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவதற்கு முன்பு, சிசோடியா தன்னை கைது செய்யக்கூடும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. பாஜகவினர் பழிவாங்க சிபிஐயைப் பயன்படுத்துகிறார்கள், என்னைக் கைது செய்வதன் மூலம் அவர்கள் அதைச் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன் என்று குற்றம் சாட்டினார். மனிஷ் சிசோடியா மத்திய நிறுவனத்துடன் “முழுமையாக ஒத்துழைப்பதாக” கூறியுள்ளார்.
144 தடை உத்தரவு:
டெல்லி மதுபான விற்பனைக் கொள்கை தொடர்பாக சிபிஐ விசாரணை 2021 ஆம் ஆண்டில் தொடங்கியது. டெல்லி கலால் துறையின் தலைவர் மணீஷ் சிசோடியாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை இன்று சிபிஐ விசாரணைக்கு அழைத்துள்ள நிலையில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.