உயிரிழந்த 135 பேர் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மோர்பியில் தொங்கும் பாலம் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க குஜராத் நீதிமன்றம் உத்தரவு.
குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவு:
குஜராத் மாநிலம் மோர்பியில் தொங்கும் பாலம் அறுந்து விழுந்து உயிரிழந்ந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மோர்பியில் தொங்கும் பாலம் விபத்தில் உயிரிழந்த 135 பேர் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க குஜராத் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதுபோன்று பால விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொங்கு பாலம் விபத்து:
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள தொங்கு பாலத்தில் கடந்த ஆண்டு அக்.30ம் தேதி ஏராளமானோர் மக்கள் திரண்டதால், பாரம் தாங்காமல் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 135 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
ஒரேவா நிறுவனம்:
இந்த வழக்கில் 1,262 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மோர்பி தொங்கு பால விபத்தில் முக்கிய குற்றவாளி ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயசுக் படேல் தான் என்பது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது. இந்த நிலையில், இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கில், மோர்பி பால விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க ஜெய்சுக்பாய் படேல், எம்.டி ஓரேவா நிறுவனத்திற்கு குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.