ஆசிரமத்தில் மீட்கப்பட்டோர் காப்பகத்தில் சேர்ப்பு – சிபிசிஐடி
அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் கூடுதல் ஆதாரம் கிடைத்துள்ளது என்று சிபிசிஐடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் தகவல்.
பாலியல் வன்கொடுமை:
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநல பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இளம்பெண்களுக்கு போதைப்பொருள் தந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகார் எழுந்த நிலையில், வழக்கு பதிவு செய்யப்பட்டது. குண்டலப்புலியூரில் உள்ள ஆசிரமத்தில் இருந்து பலர் காணாமல் போனதாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து, அன்பு ஜோதி இல்ல உரிமையாளர் ஜோபின் பேபி, மனைவி மரியா மற்றும் 6 ஊழியர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
சிபிசிஐடிக்கு மாற்றம்:
இதன்பின், அன்பு ஜோதி ஆசிரமத்தில் வழக்கு தொடர்பாக 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக டிஎஸ்பி தெரிவித்திருந்தார். இந்த சமயத்தில், விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து, அன்பு ஜோதி ஆசிரம வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. மறுபக்கம், அன்பு ஜோதி ஆசிரமத்தில் தடய அறிவியல் துறையினரும் சோதனை நடத்தினார்கள். நடமாடும் தடய அறிவியல் வாகனத்துடன் வந்து ஆய்வு செய்தனர்.
கூடுதல் ஆதாரம்:
இந்த நிலையில், விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் கூடுதல் ஆதாரம் கிடைத்துள்ளது என்று சிபிசிஐடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும். விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மீட்கப்பட்ட 8 பெண்கள் உள்பட 28 பேர் சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், கீழ்ப்பாக்கம் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் 8 பெண்கள் உட்பட 31 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.