எரிமலையைச் சீண்ட வேண்டாம் – எச்சரிக்கை! : ஆசிரியர் கீ.வீரமணி
டில்லி மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கவேண்டியது ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரின் கடமை என ஆசிரியர் கீ.வீரமணி ட்வீட்.
டெல்லி பல்கலைகழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், திராவிட கழக தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி அவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் கீ.வீரமணி ட்வீட்
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நேற்று (19.02.2023) இரவு திட்டமிட்டு, ஏபிவிபியால் பெரியார் படங்கள் உடைக்கப்பட்டுள்ளன. இந்த ரவுடிக் கும்பலின் வன்முறையைத் தட்டிக் கேட்ட தமிழ்நாட்டு மாணவர் தமிழ்நாசர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
சில நாள்களுக்கு முன்பு பெரியாரிய ஆதரவு மாணவர் பிரவீன் இதே காவிக் கும்பலால் தாக்கப்பட்டு கால் உடைந்த நிலையில் இருக்கிறார் என்றும் தெரியவருகிறது. இந்த மாணவர்கள் ஜேஎன்யூவில் தொடர்ச்சியாக சமூகநீதிக்காகக் குரல் கொடுப்பவர்கள்.
‘ரிசர்வேசன் கிளப்’ என்ற பெயரில் சமூகநீதிக்கான மாணவர் அமைப்பை நடத்தி வருகிறார்கள். பல்கலைக் கழகத்திலேயே பெரியார் பிறந்தநாள், சட்ட எரிப்பு மாவீரர் நாள், புதுக்கோட்டை வேங்கைவயல் வன்கொடுமைகளை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் எனத் தொடர்ந்து இயங்கியவர்கள்.
தமிழ்நாட்டு மாணவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது பற்றி ஏற்கெனவே காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பல்கலைக்கழக நிர்வாகமும் ஆர்.எஸ்.எஸ்., ஏ.பி.வி.பி. கூட்டத்துக்கு ஆதரவாகவே இயங்குகிறது.
தமிழ்நாடு அரசும், புதுடில்லியிலுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் உடனடியாகத் தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க உதவ வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தந்தை பெரியார் ஒரு கட்சித் தலைவரல்ல – உரிமை மறுக்கப்பட்ட மக்களின் மகத்தான தலைவர். எரிமலையைச் சீண்ட வேண்டாம் – எச்சரிக்கை!
— Asiriyar K.Veeramani (@AsiriyarKV) February 20, 2023