ஓபிஎஸ் ஆட்டக்களத்திலேயே இல்லை..! நாக் அவுட் ஆகிவிட்டார் -ஜெயக்குமார்
பணநாயகத்தை விட ஜனநாயகத்தை தான் நாங்கள் நம்புகிறோம் என ஜெயக்குமார் பேட்டி.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில், ஒவ்வொரு கட்சியினரும் தீவிர முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் புகார் அளித்தார்.
ஓபிஎஸ் ஆட்ட களத்திலேயே இல்லை
அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் பணத்தை தண்ணீர் போல் ஆளும் கட்சியினர் செலவழிக்கின்றனர். வாக்காளர்களை ஆளும் கட்சியினர் இன்பல சுற்றுலா அழைத்து செல்கின்றனர்.
வாக்காளர்களுக்கு பணமும் பிரியாணியும் கொடுக்கின்றனர். பணநாயகத்தை விட ஜனநாயகத்தை தான் நாங்கள் நம்புகிறோம். ஈரோடு கிழக்கில் உள்ள டாஸ்மார்க் கடைகள் வருமானத்தை வங்கியில் செலுத்தாமல் முறைகேடு நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஓபிஎஸ் திமுகவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறார். அவர் ஆட்ட களத்திலேயே இல்லை, நாக் அவுட் ஆகி விட்டார் என தெரிவித்துள்ளார்.