உச்ச நிலையில் சர்வாதிகாரம்! தொடங்கியது தர்மயுத்தம் 2.0… ஆதரவாளர்கள் மத்தியில் ஓபிஎஸ் பேச்சு!
அதிமுக தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் பெயரை குறிப்பிட விரும்பவில்லை என நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் பேச்சு.
2026 வரை ஒருங்கிணைப்பாளர் பதவி:
சென்னையில் தனியார் ஹோட்டலில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் பேசிய ஓபிஎஸ், கடந்த 2021ம் ஆண்டு அதிமுக தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என பதவிகள் கொண்டு வரப்பட்டன. அடிப்படை தொண்டர்கள் தான் தலைமையை தேர்ந்தெடுக்க வேண்டும். அதிமுகவின் இந்த நிலைக்கு யார் காரணம் என்று உங்களுக்கு தெரியும். அவரது பெயரை நான் உச்சரிக்க மாட்டேன், அதற்கு கூட அவர்கள் தகுதியில்லாதவர்கள்.
2026 வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் உள்ளது. தேர்தல் ஆணையத்திலும் இந்த ஆவணங்கள்தான் உள்ளன. தன் இரும்பு பிடிக்குள் கட்சியை வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நடத்திய நாடகம் தோல்வியில் முடிந்தது என தெரிவித்துள்ளார்.
சர்வாதிகாரத்தின் உச்ச நிலை:
எந்த அளவுக்கு அதிமுகவின் சட்டவிதிகளை சிதைக்க முடியுமோ, அந்த அளவுக்கு சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் சட்ட விதிகளை சிதைத்தனர். சர்வாதிகாரத்தின் உச்ச நிலைக்கு சென்று எந்தவித முன்னறிவிப்பும் இன்றி 23 பொதுக்குழு தீர்மானங்களும் ரத்து செய்யப்படும் என அறிவித்தனர். நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு மேலாக, மக்களின் தீர்ப்பு என ஒன்று இருக்கிறது, கூடிய சீக்கிரம் அது வரும். நாம் தர்மத்தின் பக்கம், நியாயத்தின் பக்கம் சென்றுகொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டார்.
சட்ட விதிகளை சிதைத்தவர் எடப்பாடி:
நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான். அதிமுக சட்ட விதிகளை எந்த அளவுக்கு சிதைக்க முடியுமோ அந்த அளவுக்கு சிதைத்து பொதுக்குழு நடத்தியது எடப்பாடி பழனிசாமி. அதிமுக பொதுச்செயலாளரை மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்ய முடியாது. ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிக்கு தொண்டர்கள் வழங்கிய மரியாதை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஈபிஎஸ் பெயரை குறிப்பிடாமல் பேசிய ஓபிஎஸ், எம்ஜிஆர் பாணியில் நீதிக்கு தலைவணங்கி உள்ளோம் என்றார்.
சட்ட விதிகளை காப்பாற்ற தர்மயுத்தம்:
அதிமுக சட்ட விதிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தர்மயுத்தத்தை நடத்தி வருகிறோம். நான் வரவு, செலவு தாக்கல் செய்ய முடியாத அளவுக்கு பொதுக்குழுவில் நடந்து கொண்டனர். இதனால் எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகளை பாதுகாக்க இரண்டாவது தர்மயுத்தம் நடைபெற்று வருகிறது. வேட்புமனுவை வாபஸ் பெற்று இரட்டை இலை வெற்றி பெற ஆதரவாக இருப்போம் என சொன்னோம். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை. மக்கள் தீர்ப்பு எனும் மகேசன் தீர்ப்பு இருக்கிறது, அது கூடிய விரைவில் வரும்.வாக்கு எண்ணிக்கையின் போது அது தெரியவரும் எனவும் கூறினார்.
தீர்மானங்கள் நிறைவேற்றம்:
அதிமுகவை சர்வாதிகார மற்றும் சதிகார கும்பலிடம் இருந்து மீட்டெடுக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, வட்ட, கிளை அளவில் நிர்வாகிகளை விரைந்து நியமிக்க தீர்மானம். எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் அதிமுக பொன்விழா ஆகிய முப்பெரும் விழா மார்ச் மாதம் நடத்த தீர்மானம். இரட்டை இலை சின்னத்தை நிரந்தரமாக பெற்று அதிமுகவை வெற்றி பாதையில் அழைத்து செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.