உச்சநீதிமன்றம் உத்தரவு.. டெல்லி மேயர் தேர்தலை பிப்.22ல் நடத்த ஒப்புதல்!
டெல்லி மேயர் தேர்தல் நடத்த முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் பரிந்துரையை ஏற்று துணைநிலை ஆளுநர் ஒப்புதல்.
டெல்லி மாநகராட்சி தேர்தல்:
டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், பாஜகவின் கோட்டையாக இருந்த டெல்லி மாநகராட்சி ஆம் ஆத்மி வசம் சென்றது. அதாவது, மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி 134 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்ற நிலையில், பாஜக 104 இடங்களுடன் இரண்டாமிடம் பெற்றது. இந்த சமயத்தில், டெல்லி மேயர் தேர்தலுக்கு முன் 10 நியமன உறுப்பினர்களை துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா நியமித்தார்.
ஆம் ஆத்மி – பாஜக இடையே மோதல்:
இதற்கு ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. இதனால் டெல்லி மாமன்ற கூட்டத்தில் ஆம் ஆத்மி – பாஜக உறுப்பினர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக, மேயர் தேர்தல் கடந்த 2 மாதங்களில் மேயர் தேர்தல் 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. துணைநிலை ஆளுநர் பரிந்துரைக்கப்பட்ட 10 உறுப்பினர்கள் மேயர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர், நியமன உறுப்பினர்கள் வாக்களிக்கும் உரிமையை எதிர்த்து ஆம் ஆத்மி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதால் மூன்று முறை சபை தடைபட்டன.
மேயர் தேர்தல் தொடர்பாக வழக்கு:
இதையடுத்து, டெல்லி மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீது தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. அதாவது, டெல்லி மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்களுக்கு வாக்கு இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் டெல்லி மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியாது என ஆணையிட்டு, 24 மணிநேரத்திற்குள் மேயர் தேர்தல் அறிவிக்கையை வெளியிட நேற்று உச்சநீதிமன்றம் அதிரடியாக ஆணையிட்டது.
மேயர் தேர்தல் நடத்த ஆளுநர் ஒப்புதல்:
இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை பிப்.22-ஆம் தேதி நடத்த துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார். பிப்ரவரி 22-ஆம் தேதி மேயர் தேர்தலை நடத்த வேண்டும் என்ற டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் பரிந்துரையை ஏற்று துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். ஆம் ஆத்மி மற்றும் பாஜக உறுப்பினர்களின் கூச்சல் காரணமாக மேயர் தேர்தல் முன்னதாக மூன்று முறை ரத்து செய்யப்பட்ட நிலையில் வரும் 22-ஆம் தேதி மேயர் தேர்தல் நடைபெற உள்ளது. நியமன உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.