2018ஐ விட அதிகளவு ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்… திரிபுரா வாக்குப்பதிவு சதவீதம் இதோ…
ஒரு சில பகுதிகளில் வன்முறைகள் நடந்ததைத் தவிர, வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியாக நடந்த திரிபுரா மாநிலத்தில் 86.10 சதவீத வாக்குகள் பதிவு.
திரிபுரா சட்டமன்ற தேர்தல்:
திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடைபெற்று முடிந்தது. ஆளும் பாஜக பழங்குடியின மக்கள் முன்னணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் இடதுசாரி கட்சி (CPM) காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளது. இதுபோன்று, திரிபுரா -ஐபிஎஃப்டி மற்றும் திப்ரா மோதா ஆகிய கட்சிகளும் மாநில கட்சி அளவில் பிரதான முக்கியத்துவம் பெறுகின்றன.
மும்முனைப் போட்டி:
ஆளும் பாஜக, இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி மற்றும் பிராந்தியக் கட்சியான திப்ரா மோதா இடையே மும்முனைப் போட்டியைக் கண்ட திரிபுராவில், ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களுக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் 86.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. திரிபுராவில் கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 79 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
புரு சமூக மக்கள்:
கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலை விட இந்தமுறை வாக்களிப்பதற்கு மக்களின் ஆர்வம் அதிகமாகியுள்ளது. இதில், குறிப்பாக இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் மிசோரமில் இருந்து திரிபுராவிற்கு குடிபெயர்ந்த புரு சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள், முதல் முறையாக தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்தனர். திரிபுராவின் தலாய் மாவட்டத்தின் 47 அம்பாசா சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஹடுக்லௌபாரா வாக்குச் சாவடியில் புலம்பெயர்ந்தோர் அதிக அளவில் வந்து வாக்களித்ததாக கூறப்படுகிறது.
வாக்குப்பதிவுக்கு மத்தியில் வன்முறை:
திரிபுராவில் வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் சிறு சிறு வன்முறைகள் பற்றிய தகவல்கள் வெளியாகின. வெவ்வேறு வன்முறைச் சம்பவங்களில் சிபிஐ(எம்) தலைவர் மற்றும் இடதுசாரிக் கட்சியின் 2 வாக்குச் சாவடி முகவர்கள் உட்பட குறைந்தது 3 பேர் காயமடைந்தனர். செபஹிஜாலா மாவட்டத்தில் உள்ள போக்சநகர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதில் சிபிஐ(எம்) கமிட்டி செயலாளர் காயமடைந்தார்.
இந்த வன்முறை குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மாணிக் சர்க்கார், “பாஜக சார்பில் தீயவாதிகள் பிரச்னையை ஏற்படுத்தி மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்து வருகின்றனர் என்றார். கடந்த 2018 திரிபுரா சட்டமன்றத் தேர்தலில், சிபிஐ(எம்)-இன் 27 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது பாஜக. 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 36 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை அமைத்தது.
2013-ல் பாஜக வெறும் 1.54 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தாலும், 2018-ல் வாக்குப் சதவீதம் 43 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்தது. இது பிரதமர் நரேந்திர மோடியின் கவர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. திரிபுரா சட்டசபையின் மூன்றில் ஒரு பங்கு (20) இடங்களில் பழங்குடியின வாக்காளர்கள் தீர்மானிக்கும் காரணியாக உள்ளனர். 2018ல் இந்த 20 இடங்களில் 10 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI(M)) கட்சி 16 இடங்களை கைபற்றயது. திரிபுரா -ஐபிஎஃப்டி கட்சியானது 8 இடங்களை கைப்பெற்றியது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இம்முறை, கடந்த முறையை விட அதிக இடங்களை பாஜக கைப்பற்றும் என அம்மாநில முதல்வர் வாக்குப்பதிவு செலுத்திவிட்டு பத்திரிகையாளர்களிடம் கூறினார். எதுவாக இருந்தாலும், வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து மற்றும் மேகாலயாவுடன் மார்ச் 2 ஆம் தேதி திரிபுர மாநிலத்தின் தேர்தல் முடிவுகளும் தெரிந்துவிடும்.