#WT20I2023: அயர்லாந்துக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி அபார வெற்றி.!
ஐசிசி மகளிர் டி-20 உலகக்கோப்பையில் அயர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் ஐசிசி மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடரில் பிரிவு பி (Group-B)-ல் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் நேற்று நியூலாண்ட்ஸ் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இதில் அயர்லாந்து அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை முனீபா அலி(102 ரன்கள்) சதமடித்து அசத்தினார்.
இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 5விக்கெட்டை மட்டும் இழந்து 165 ரன்கள் குவித்தது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்துவந்தது. அந்த அணியில் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட்(31 ரன்கள்) மற்றும் எமியர் ரிச்சர்ட்சன் (28 ரன்கள்) தவிர மற்ற யாரும் பெரிதாக நிற்கவில்லை, இதனால் அயர்லாந்து அணி 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பாகிஸ்தான் அணியில் நஸ்ரா சந்து 4 விக்கெட்களும், சதியா இக்பால் மற்றும் நிடா டார் தலா 2 விக்கெட்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். பாகிஸ்தான் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளுடன் 3-வது இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணியின் முனீபா அலி ஆட்ட நாயகியாக தெரிவ செய்யப்பட்டார்.