இந்தியா டிஜிட்டல் புரட்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதால் இளைஞர்களின் எண்ணங்கள் நிறைவேறும்!பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி,இந்தியா டிஜிட்டல் புரட்சியை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதால் இளைஞர்களின் எண்ணங்கள் நிறைவேறும் என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அவர் சிங்கப்பூர், மலேசிய தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
தெற்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இந்தோனேசியாவை அடுத்து மலேசியா சென்றடைந்தார். மலேசிய பிரதமர் மகாதீர் முகமதுவை சந்தித்து பேசிய மோடி இந்தியா-மலேசியா இடையே நட்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசித்தார்.
மலேசியாவை அடுத்து சிங்கப்பூர் சென்ற பிரதமருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமரை வரவேற்று இந்திய வம்சாவளியினர் உற்சாக முழக்கங்கள் எழுப்பினர்.
மாலையில் சிங்கப்பூர் மெரினா பே சாண்ட்ஸ் கருத்தரங்க மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கண்காட்சியை மோடி பார்வையிட்டார்.இதனைத் தொடர்ந்து தொழில்முனைவோருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பிரதமரை வரவேற்கும் விதமாக இந்திய கலாச்சார நடனங்களுடன் கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
இதையடுத்து பேசிய மோடி இந்தியா டிஜிட்டல் புரட்சியை அரங்கேற்றி வருவதாகவும் இளைஞர்கள் எண்ணியதை சாதிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அவர் தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இன்று சிங்கப்பூர் பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் ஆசிய பசுபிக் நாடுகளின் பாதுகாப்பு சார்ந்த ஷாங்கிரி லா கருத்தரங்கிலும் உரையாற்ற உள்ளார் . இதில் ஆசிய பசிபிக் பிராந்தியங்களைச் சேர்ந்த 28 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் ராணுவ தலைவர்கள் பங்கேற்று பிராந்திய பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.