ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்பு..! அரசு நிதி உதவி அறிவிப்பு..!
காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி அரசு அறிவித்துள்ளது.
காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவிகளின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தலா ரூ.2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். கரூர் மாவட்டம் மாயனூர், காதவனை அருகே உள்ள காவிரி ஆற்றில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த நான்கு மாணவிகள் மூழ்கி உயிரிழந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகள் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர். ஆற்றில் சுழல் உள்ளதை அறியாமல் ஒரு மாணவி ஆற்றில் இறங்கியபோது நீரில் மூழ்கியுள்ளார். ஆற்றில் மூழ்கிய மாணவியை காப்பாற்ற முயன்றபோது மற்ற 3 மாணவிகளும் சுழலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதையடுத்து மீட்பு துறையினர், தமிழரசி, சோபிகா, இனியா, லாவண்யாவின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளுக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.