கச்சா எண்ணெய் விலை குறைவு எதிரொலி!பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு !
சென்னையில் பெட்ரோல் விலையில் 7 காசுகளும், டீசல் விலையில் 6 காசுகளும், கச்சா எண்ணெய் விலை குறைவால் குறைந்துள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக, பெட்ரோல் டீசலின் விலை உயர்த்தப்பட்டு வந்தது. கடந்த புதன்கிழமை பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ஒரு பைசா மட்டும் குறைக்கப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் விலை உயர்த்தப்பட்டதால், வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், சென்னையில் இன்று காலை பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் குறைந்து, 81 ரூபாய் 28 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் விலை லிட்டருக்கு 6 காசுகள் குறைந்து. 73 ரூபாய் 6 காசுகளுக்கு விற்கப்படுகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், 7 காசுகள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது, வாகன ஓட்டிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் நிறுவனமான ஓ.என்.ஜி.சி, தனது மானியத்தின் பலனை பெட்ரோல் நிலையங்களுக்கு தர வேண்டும் என்றும் அதன் மூலம் விலைகுறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்குமாறும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையே கேரளாவில் மாநில அரசு வரிகளைக் குறைத்ததன் மூலம் இன்று முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வழிமுறையை அனைத்து மாநில அரசுகளும் பின்பற்றும்படி மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.