திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் கைது.? மறுப்பு தெரிவித்த காவல்துறை.!
திருவண்ணாமலை தொடர் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததாக வந்த செய்தி முழுக்க முழுக்க பொய் என திருவண்ணாமலை காவல்துறை தெரிவித்துள்ளது .
அண்மையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து ஏடிஎம்களில் கொள்ளை நடைபெற்று சுமார் 72 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. அடுத்தடுத்து ஒரே நிறுவனத்தை சேர்ந்த ஏடிஎம் கொள்ளையடிக்கப்பட்டதால் பெரும் பதட்டம் உருவானது.
உடனடியாக மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் கீழ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை தமிழகத்தை தாண்டியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஏடிஎம் கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்ததாக ஓர் பொய்யான செய்தி வெளியாகியது.
இந்த செய்திக்கு காவல்துறை தரப்பு மறுப்பு தெரிவித்து உள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கையில், 3 பிரிவுகளில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஒரு பிரிவு கர்நாடகாவுக்கும், இன்னோர் பிரிவு ஹரியானா மாநிலத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.
அதே போல, மற்றொரு பிரிவு காவல்துறையினர்தமிழகத்தில் விசாரணை செய்து வருகின்றனர் எனவும், இதில் ஒரே நிறுவனத்தை சேர்ந்த ஏடிஎம்களில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதால், தொழில்நுட்ப பிரிவு வாயிலாகவும் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் எல்லை பகுதிகளில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது என காவல்துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது .