சென்னைக்கு மீண்டும் ஐபிஎல் கோப்பையை வாங்கி கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி! மகேந்திர சிங் தோனி நெகிழ்ச்சி

Default Image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ,சென்னைக்கு மீண்டும் ஐபிஎல் கோப்பையை பெற்றுத் தந்ததில் பெருமை அடைகிறோம் என்று  கூறினார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 2 ஆண்டு தடைக்குப் பிறகு சிஎஸ்கே அணி களமிறங்கியது. லீக் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக ஆடிய சிஎஸ்கே 2-வது இடம் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. பிளே-ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சிஎஸ்கே வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியுடன், சிஎஸ்கே மீண்டும் மோதும் நிலை ஏற்பட்டது. லீக் சுற்றில் 2 ஆட்டங்கள், பிளே-ஆப் சுற்றில் ஒரு ஆட்டம் என அனைத்திலும் சிஎஸ்கே வென்றிருந்ததால் உறுதியுடன் களமிறங்கியது.

இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சென்னை அணி வெற்றி கண்டது. ஷேன் வாட்சனின் அதிரடியான சதத்தால் சென்னை அணி 3-வது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது.

2010, 2011-ல் கோப்பையை வென்றிருந்த சிஎஸ்கே அணி 2018-ல் மீண்டும் கோப்பையை வென்றதால் சென்னை ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். கடந்த திங்கள்கிழமை மாலை சென்னை திரும்பிய தோனி தலைமையிலான அணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து மாலையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வீரர்கள், அவர்களது குடும்பத்தார், உரிமையாளர்கள், அணி நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட விருந்து நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தேறியது. விருந்து நிகழ்ச்சியில் கேப்டன் தோனி பேசியதாவது:

2 ஆண்டு தடைக்குப் பிறகு இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை அணி களமிறங்கியது. பல்வேறு விஷயங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி இருந்தது. சென்னை அணியில் 30 வயதுக்கும் அதிகமான வீரர்கள் பலர் இடம்பெற்றிருந்தனர். சில வீரர்கள் 35 வயதுக்கும் மேற்பட்டவர்கள். அதனால் நாம் சிறந்த அணி என்பதை இந்த உலகுக்கு மட்டும் அல்ல நமக்கு நாமே நிரூபிக்கவேண்டிய நிலை இருந்தது.

எனவே லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்காக அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டோம். நம் அனைவரின் எதிர்பார்ப்பும் பூர்த்தியாகும் வகையில் நாக்-அவுட் சுற்றை அடைந்தோம். டி 20 போட்டிகள் என்பது வித்தியாசமானது. நமது அணி சிறந்த பங்களிப்பைத் தரவேண்டும். எதிரணியைச் சேர்ந்த ஒரு பேட்ஸ்மேன் 2 அல்லது 3 ஓவர்களில் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடலாம். அதைப் போலத்தான் பந்து வீச்சாளரும் ஆட்டத்தை நம்மிடமிருந்து பறித்துச் சென்றுவிடலாம். அணியில் உள்ள தனிப்பட்ட வீரர் ஒருவராலும் ஆட்டத்தை வெல்ல முடியும். அப்படி வெல்ல முடியாமல் போனால் நாம் எங்கு தவறு செய்தோம் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். அதைத் திருத்திக் கொள்ளவேண்டும்.

சென்னை அணியில் அதிக வயதான வீரர்கள் இருக்கிறார்கள் என்ற கருத்து கவலையளிக்கும் விஷயமாக இருந்தது. அடுத்த ஐபிஎல் போட்டி நடைபெறும்போது நமக்கு இன்னும் ஒரு வயது கூடியிருக்கும். அடுத்த ஓராண்டுக்குள் வீரர்கள் உடற்தகுதியை இப்போது இருப்பது போலவே வைத்துக்கொண்டால் போதுமானது. இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஒளிபரப்பு அருமையாக இருந்தது. அந்த நிறுவனத்துக்கு எனது நன்றி.

இந்தத் தொடரில் பல வீரர்களுக்கு விளையாட வாய்ப்புக் கிடைத்தது. பலருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அவர்கள் மனம் தளரக்கூடாது. ஐபிஎல் போட்டியில் சர்வதேச போட்டிக்கான நடைமுறைகளைக் கடைப்பிடித்து வருகிறோம். நீங்கள் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் உங்களுக்கு அணியில் நிச்சயம் இடமுண்டு. அப்படி பரிமளிக்காத பட்சத்தில் உங்களது இடத்தை வேறொருவர் நிரப்பிவிடுவார் என்பதை மறக்கக்கூடாது.

கடந்த 2 மாதங்களில் வீரர்கள் தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களுடன் அடுத்த ஆண்டு போட்டிக்கு வரவேண்டும். பயிற்சியாளர்களிடம் உங்களது திறமைகளை நிரூபித்து விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் இடம்பிடிக்க முயலவேண்டும். உங்களை பயிற்சியாளர்கள் மெருகேற்றுவார்கள். கோப்பையை வென்ற அணி என்பதில் நாம் நிச்சயம் மகிழ்ச்சியடையவேண்டும். 2 ஆண்டு தடைக்குப் பிறகு ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான்.

சென்னை அணிக்காக அருமையான ஒரு பாடலை டுவைன் பிராவோ உருவாக்கியிருந்தார். அதற்காக அவருக்கு எனது நன்றிகள். அடுத்த முறை நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கோப்பையை தக்க வைக்க நாம் முயல்வோம். சென்னைக்கு மீண்டும் கோப்பையை பெற்றுத் தந்ததில் பெருமை அடைகிறோம்.

இவ்வாறு தோனி பேசினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்