ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் அரசியல் பேசக்கூடாது- சி.பி.ராதாகிருஷ்ணன் !
ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் அரசியல் பேசக்கூடாது என்று பாஜகவின் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஆளுநராக இருப்பவர்கள் அரசியல் குறித்து பேசாமல் வளர்ச்சிக்காக மட்டும் கவனம் செலுத்துவது சிறந்தது என்று பாஜகவின் மூத்த தலைவரும் ஜார்கண்ட் மாநிலத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநருமான சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதேபோல், அரசியல் தலைவர்கள் ஆளுநர் பதவிக்கு வரும்போது, அரசியல் ஆசைகளை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கூறினார்.
தற்போது தெலுங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்தின் ஆர்.என்.ரவி இருவரும் அந்தந்த மாநில அரசியலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. பாஜக அல்லாத அரசுகள் நடத்தும் மாநிலங்களில் நியமிக்கப்பட்ட அனைத்து ஆளுநர்களும் அரசியலில் ஈடுபடுவதாகவும், கூறப்பட்டுவருகின்ற நிலையில் பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து பேசிய அவர், தமிழக வரலாற்றில் இதுவரை மூன்று பேர் ஒரே நேரத்தில் கவர்னர்களாக பதவி வகித்ததில்லை, இது ஒட்டுமொத்த மாநிலத்திற்கே பெருமை சேர்ப்பதாகவும் கூறினார். மேலும் அவர் ஆளுநராக பதவியேற்றதும், தமிழகம் மற்றும் ஜார்கண்ட் மாநில கலாச்சார பாலமாக இருந்து இரு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பேன் என்றும் கூறியுள்ளார்.