தமிழ்நாடு அரசு 3 லட்சம் மின் இணைப்புகள் வழங்கி சாதனை !அமைச்சர் தங்கமணி
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி,ஒரு நாளில் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த ஓராண்டில், 3 லட்சம் மின் இணைப்புகள் வழங்கி, தமிழ்நாடு அரசு சாதனை படைத்திருப்பதாக, தெரிவித்திருக்கிறார்.
சட்டப்பேரவையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று, அதன் மீது, அமைச்சர் தங்கமணி பதிலுரையாற்றினார். 2022ஆம் ஆண்டுக்குள் பல்வேறு புதிய மின் திட்டங்கள் படிப்படியாக செயல்பாட்டிற்கு வரவுள்ளதாகவும், இதன் மூலம் தமிழ்நாட்டில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்றும் தங்கமணி கூறினார். மின்சார பராமரிப்பு பற்றி முன்கூட்டியே தகவல் தெரிவிக்கும் “மின்சார நண்பன்” என்ற திட்டத்தின் மூலம் 2 கோடியே 24 லட்சம் பேருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக தங்கமணி தெரிவித்தார்.
ஒரு நாளில் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின்படி ஓராண்டிற்குள் 3 லட்சம் மின் இணைப்புகள் வழங்கி, தமிழ்நாடு அரசு சாதனை படைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். தட்கல் முறையில் மின்னிணைப்பு வழங்கல் திட்டத்தின் மூலம், ஒருமுறை கட்டணம் செலுத்தும் 10 ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கு இந்த வருடமும் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி அறிவித்தார். இந்தாண்டு மட்டும் விவசாயிகளுக்கு தட்கல் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையில் 30 ஆயிரத்து 835 பேருக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
சென்னையில் முழுவதுமாக மின் தடையே இல்லாத நிலை எட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். வேலையில்லா இளைஞர்களுக்கு, தொழில் முனைவோருக்குரிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும் விதமாக, ஒரு மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி நிலையங்களை நிறுவ தேவையான உதவிகளை, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை வழங்கும் என்றார். சொந்த நிலங்களை உடைய பல்கலைக்கழகங்கள், அறக்கட்டளை நிறுவனங்கள் ஒவ்வொன்றும் அதிகபட்சம் 5 மெகாவாட் நிறுவு திறன் கொண்ட சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கை மீது பதிலுரையாற்றிய அமைச்சர் தங்கமணி, பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார். டாஸ்மாக்கில் பணியாற்றும், 26 ஆயிரத்து 463 சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றார். இதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு தொகுப்பு ஊதியம் 750 ரூபாயும், விற்பனையாளர்களுக்கு 600 ரூபாயும், உதவி விற்பனையாளர்களுக்கு 500 ரூபாயும் உயர்த்தி வழங்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி அறிவித்தார். டாஸ்மாக் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு வருகிற செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.