#BREAKING: பல்வேறு துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை!
சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை.
முதலமைச்சர் ஆலோசனை:
தமிழ்நாடு அரசின் “முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்” குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர், துறை ரீதியான அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வரும் மிக முக்கியத்துவம் வாய்ந்த, பெரிய திட்டப் பணிகள் துறை வாரியாகத் தொகுக்கப்பட்டு முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்’ (Iconic Projects) என ஆய்வு செய்யப்படுகின்றன.
முதலாவது ஆய்வுக் கூட்டம்:
அரசு நடைமுறைப்படுத்தி வரும் மிக முக்கியத்துவம் வாய்ந்த, பெரிய திட்ட பணிகள் துறைவாரியாக ஆய்வு செய்ய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த வாரம் தமிழ்நாட்டில் முத்திரை பதிக்கும் திட்டங்கள் (Iconic Projects) தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
அன்று நடைபெற்ற முதலாவது ஆய்வுக் கூட்டத்தில் 12 துறைகளைச் சார்ந்த நடைமுறையில் உள்ள 51 திட்டங்கள் குறித்தும், 19 எதிர்கால திட்டங்கள் குறித்தும், அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது துறைச் செயலாளர்கள் தங்களது துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் நிலை,முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்தனர்.
அரசு செயலாளர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்:
அனைத்து திட்டங்களுமே அரசின் திட்டங்கள்தான் என்பதை மனதில் நிறுத்தி அரசு அலுவலர்கள் செயல்பட வேண்டுமென்று முதலமைச்சர் உத்தரவிட்டார். திட்டங்களுக்கான வடிவமைப்பு மற்றும் ஒப்பந்தப் பணிகளை விரைவாக இறுதி செய்து, இன்னும் துவங்காத பணிகளைத் துவக்கி, அவற்றைத் துரிதமாகவும், தரமாகவும் முழுமையாக விரைவாக முடித்திடவும் அனைத்துத் துறை அரசு செயலாளர்களையும் வலியுறுத்தினார். இந்த நிலையில், இன்றும் மீண்டும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் முதல்வர்.