ரயில் விபத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 15 பேர் பலியாகின்றனர் ..!
இந்திய ரயில் பாதைகளில் நடைபெறும் விபத்துகளில் தினமும் 15 பேர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.இந்தியாவில் ரயில் விபத்துக்களில் உயிரிழப்போர் எண்ணிக்கை, மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் ரயில் விபத்துக்களில் பலியாவோர் பற்றிய விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.
இதற்கு ரயில்வே நிர்வாகம் தற்போது பதிலளித்துள்ளது. அதில், 2014-ஆம் ஆண்டு முதல் மார்ச் 2018 வரை 23 ஆயிரத்து 13 பேர், ரயில் விபத்துகளில் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 15 பேர் வரை உயிரிழப்பதாக கூறியுள்ளது.அதிகபட்சமாக தெற்கு – மத்திய ரயில்வே மண்டலத்தில் 3 ஆயிரத்து 874 பேர் இறந்துள்ளனர்.
மேலும், மத்திய ரயில்வே மண்டலத்தில் 3 ஆயிரத்து 333 பேரும், மேற்கு ரயில்வே மண்டலத்தில் 2 ஆயிரத்து 384 பேரும், வடக்கு ரயில்வே மண்டலத்தில் 2 ஆயிரத்து 127 பேரும், வடக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் ஆயிரத்து 738 பேரும், கிழக்கு ரயில்வே மண்டலத்தில் ஆயிரத்து 85 பேரும், வட கிழக்கு ரயில்வே மண்டலத்தில் 775 பேரும் ரயில் விபத்துகளில் பலியாகியுள்ளனர்.குறைந்தபட்சமாக வட மேற்கு ரயில்வே மண்டலத்தில் 278 பேர் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளனர். இதேகாலகட்டத்தில் 12 ஆயிரத்து 598 பேர் ரயில் விபத்துக்களில் சிக்கி காயமடைந்து உள்ளதாகவும், இவற்றில் அதிகமான விபத்துக்கள் தண்டவாளத்தைக் கடக்கும் போது ஏற்பட்டவையே என்றும் ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது