எம்எக்ஸ் ப்ளேயரை கையகப்படுத்த அமேசான் பேச்சுவார்த்தை..! வெளியாகிய தகவல்..!
அமேசான், டைம்ஸ் இன்டர்நெட் உடன் இணைந்து எம்எக்ஸ் ப்ளேயரை வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அமேசான் நிறுவனம் டைம்ஸ் இன்டர்நெட் உடன் இணைந்து வீடியோ ஸ்ட்ரீமிங் சேவைகளில் ஒன்றான எம்எக்ஸ் ப்ளேயரை (MX Player) வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அமெரிக்க இ-காமர்ஸ் நிறுவனம் முக்கியமான சர்வதேச சந்தையில் தனது பொழுதுபோக்கு லட்சியங்களை விரிவுபடுத்த விரும்புவதால் இந்தியாவில் அனைவராலும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வரும் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையான எம்எக்ஸ் ப்ளேயரை (MX Player) வாங்குவது குறித்த டைம்ஸ் இன்டர்நெட் உடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறது.
இது குறித்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. 2018 ஆம் ஆண்டில் இந்திய கூட்டு நிறுவனமான டைம்ஸ் இன்டர்நெட் 140 மில்லியன் டாலருக்கு எம்எக்ஸ் ப்ளேயரை வாங்கியுள்ளது.
குறைந்த விலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் கூட பலதரப்பட்ட வீடியோ பதிவுகளை பார்ப்பதற்கு பயன்படுத்தப்பட்ட இந்த செயலி சமீபத்திய ஆண்டுகளில் உலகளவில் 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.