இதை பார்க்கும்போது இதுதான் புதிய இந்தியா என தோன்றுகிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி
இன்றைய பட்டமளிப்பு விழாவில் அதிக அளவில் பெண்கள் பட்டம் பெற்றதும், பதக்கங்கள் பெற்றதும் பெருமைக்குரிய விஷயமாகும் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.
கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இன்றைய பட்டமளிப்பு விழாவில் அதிக அளவில் பெண்கள் பட்டம் பெற்றதும், பதக்கங்கள் பெற்றதும் பெருமைக்குரிய விஷயமாகும். நமது நாட்டின் வளர்ச்சியின் முக்கியமான காலத்தில் நாம் இருக்கிறோம் என்பது பெருமைக்குரிய விஷயமாகும். இதை எண்ணி மாணவர்கள் இளைஞர்கள் பெருமை கொள்ள வேண்டும்.
இதுதான் புதிய இந்தியா
உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது; மொபைல் தயாரிப்பில் 2வது இடத்தில் இந்தியா உள்ளது; பெண்கள் பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறார்கள்; பெண் குழந்தைகள் அதிகளவில் பட்டம் பெறுவதை பார்க்கும்போது இதுதான் புதிய இந்தியா என தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் சிலர் பிரிட்டிஷ் ஆட்சியை துன்பத்திலும் கிடைத்த வரம் என்கிறார்கள். இது என்ன மாதிரியான மனநிலை? பிரிட்டிஷ் அரசு இந்தியாவை பல பகுதிகளாக பிரித்தாளும் சூழ்ச்சியை செய்தது. பிரிட்டிஷ் ஆட்சி முடிந்தும் கடந்த 70 ஆண்டுகளாக நமது நாடு வறுமை, பட்டினி, வீடில்லா மக்களைக் கொண்ட நாடாக இருந்ததற்கு, இந்தியாவை வெறும் நிலப்பரப்பாக பார்த்த அரசாங்கங்களே காரணம். ஆனால், இப்போதைய அரசு இந்தியாவை ஒரே குடும்பமாக பார்க்கிறது.