பரபரப்பாகும் தேர்தல் களம்… ஊழல் உறைவிடம் அதிமுக… சரமாரியான குற்றசாட்டுகளை முன்வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு.!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து, அதிமுக ஆட்சியின் மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைத்து பேசினார் திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. நாட்கள் நெருங்க நெருங்க தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. கட்சி தலைவர்கள் தங்கள் கட்சியின் கள நிலவரங்களை மக்களிடம் அவ்வப்போது செய்தியாளர்கள் வாயிலாக கூறி வருகின்றனர். அதில் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகிறார்கள்.
தங்கம் தென்னரசு : தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி திமுக தேர்தல் அலுவலகத்தில் திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக கட்சியில் நடந்த ஊழல் என ஒரு பெரும் பட்டியலை கூறினார்.
காவிரி பிரச்னை : அதில் அவர் கூறுகையில், உதகை மின்திட்டத்திற்கு ஜெயலலிதா அம்மையார் இருந்த வரையில் அவர் அனுமதிக்கவே இல்லை. இவர்கள் கையில் எப்போது ஆட்சி சென்றதோ அப்போதே அனுமதி அளித்ததன் காரணமாக தமிழக மின்சாரத்துறைக்கு பெரும் பாதிப்பாக மாறி போனது. காவிரி பிரச்சனையில் அதிமுகவினர் தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர் என குற்றம் சாட்டினார்.
மேகதாது : மேலும், மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சியினரையும் அழைத்து கொண்டு கடைசி வரை ஆலோசிக்க மாட்டோம் என இபிஎஸ் இருந்துவிட்டார் என குற்றம் சாட்டினார். மேலும், வேளாண் சட்டத்தை ஆதரித்த ஆட்சி, சிறுபான்மையினர் பாதிக்கப்படும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட ஆட்சி இபிஎஸ் ஆட்சி என சரமாரி குற்றசாட்டுகளை முன்வைத்தார்.
ஊழல் உறைவிடம் : அடுத்து, ஊழல் உறைவிடம் அதிமுக தான் இவர்கள் ஊழலை பற்றி பேசுகிறார்கள் என விமர்சித்த அமைச்சர், நெடுஞ்சாலைத்துறை விவகாரம் என பல்வேறு ஊழல்களில் ஈடுப்பட்டவர்கள் அதிமுகவினர். போதைப்பொருள், குட்கா பற்றி பேசுகிறார். இவரது ஆட்சியில் ஒரு அமைச்சர் , டிஜிபி மீது சிபிஐ குட்கா வழக்கு பதிவு செய்து இன்னும் வழக்கு நடந்து வருகிறது என குற்றம் சாட்டினார்.
சட்டம் ஒழுங்கு : ஸ்டெர்லைட் விவகாரத்தை நான் டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என பதில் கூறும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கேடு தலைதூக்கி இருந்தது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அப்படியே மூடி மறைத்தவர்கள் அதிமுகவினர் என கூறி எத்தனை முகமூடிகளை மூடிக்கொண்டு வந்தாலும் இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என கூறினார் அமைச்சர் தங்கம் தென்னரசு.