லக்னோவில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு; பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.!
உத்தரபிரதேசத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டை பிரதம மந்திரி நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். 41 நாடுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், உயர்மட்ட தொழில்துறை தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், 10 கூட்டணி நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள்/தூதர்கள், முன்னணி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் சிஇஓக்கள் உட்பட 10,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டின் 34 அமர்வுகளில் பங்கேற்கின்றனர்.
பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் பல அமர்வுகளுக்கு தலைமை தாங்குகின்றனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன், கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் நாதிர் கோத்ரெஜ், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, டிக்சன் டெக்னாலஜிஸ் தலைவர் சுனில் வச்சானி மற்றும் ஜூரிச் ஏர்போர்ட் ஆசியாவின் தலைமை நிர்வாகி டேனியல் பிர்ச்சர் ஆகியோர் இதில் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.