நமக்கு பக்கத்துல இருக்குற கேரளாவா பாருங்க!நீங்களும்தான் இருக்கீங்களே!பெட்ரோல் விலை உயர்வுக்கு சரியான யோசனை கூறிய ராமதாஸ்

Default Image

பாமக நிறுவனர் ராமதாஸ் ,கேரள அரசைப் போன்று தமிழக அரசும் எரிபொருள் மீதான விற்பனை வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், அதை சமாளிப்பதற்கான நடவடிக்கையாக பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்து கேரள அரசு ஆணையிட்டுள்ளது. கேரளத்தில் குறைக்கப்பட்ட எரிபொருள் விலை வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றன. இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மிகச்சரியான முடிவு.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. சென்னையில் இன்றைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.35 ஆகவும், டீசல் விலை ரூ.73.12 ஆகவும் உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி, தினமும் சராசரியாக லிட்டருக்கு 30 காசுகள் வரை உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள், விலையை குறைக்கும் போது மட்டும் லிட்டருக்கு ஒரு காசு, 5 காசுகள், 7 காசுகள் என கஞ்சத்தனம் காட்டுகின்றன.

கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு கலால் வரியை உயர்த்திய மத்திய அரசு, அதை இப்போது குறைக்க வேண்டுமென விடுக்கப்படும் வேண்டுகோள்களை புறக்கணிக்கிறது. இத்தகைய சூழலில் மத்திய அரசுக்கும், பிற மாநில அரசுகளுக்கும் வழிகாட்டும் வகையில் கேரள அரசு விற்பனை வரியை குறைத்திருக்கிறது.

கேரள அரசின் இந்த அறிவிப்பிலிருந்து மற்ற மாநில அரசுகள், குறிப்பாக தமிழக அரசு பாடம் கற்க வேண்டும். இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரி அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும். கடந்த ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி தமிழகத்தில் பெட்ரோல் மீதான விற்பனை வரி 27 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாகவும், டீசல் மீதான விற்பனை வரி 21.43 விழுக்காட்டில் இருந்து 25% ஆகவும் உயர்த்தப்பட்டது.

இதன்காரணமாக மஹராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக பெட்ரோல் மற்றும் டீசல் மீது அதிக வரி வசூலிக்கும் மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது. ஒருபுறம் மிக அதிக கலால் வரியை விதித்து பொதுமக்களை மத்திய அரசு வஞ்சிக்கும் நிலையில், அதே அணுகுமுறையை மாநில அரசும் கடைபிடிப்பது முறையல்ல.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.66 விற்பனை வரியாக வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, மத்திய அரசு வசூலிக்கும் ரூ.19.48 கலால் வரியில் மாநில அரசின் பங்காக கிடைக்கும் ரூ.8.18-ம் சேர்த்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில் தமிழக அரசுக்கு ரூ.27.84 வருமானம் கிடைக்கிறது. அதேபோல், டீசல் விற்பனையில் விற்பனை வரியாக ரூ.12, மத்திய அரசின் கலால் வரி வருவாயில் மாநில அரசின் பங்காக ரூ.6.45 என ரூ.18.45 வருமானம் கிடைக்கிறது.

தமிழக அரசின் வரி வருவாயில் பெரும் பகுதி மது விற்பனை மற்றும் எரிபொருள் விற்பனை மூலம் மட்டுமே கிடைக்கிறது. ஒரு மாநில அரசு அதன் செலவுகளுக்காக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் மீது அதிக வரி வசூலிப்பது வழிப்பறிக்கு இணையான செயல் ஆகும்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட விற்பனை வரியை குறைத்தாலே பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.31 குறையும். அதேபோல், டீசல் விலை ரூ.2.10 குறையும். இந்த விலைக்குறைப்பால் தமிழக அரசுக்கு பெட்ரோல், டீசல் விலை மூலம் கிடைக்கும் வருமானத்தில் பெரிய அளவில் எந்த இழப்பும் ஏற்படாது.

அதேநேரத்தில் மக்களின் செலவு பெருமளவில் குறையும். இதனால் தொழில் உற்பத்தி அதிகரித்து மாநில அரசின் வருவாய் அதிகரிக்கும். மாறாக பெட்ரோலியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டால் அது தமிழகத்தின் முன்னேற்றத்தை கடுமையாக பாதிக்கும்.

மத்திய அரசைப் பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.48, ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.33 வீதம் கலால் வரி வசூலிக்கிறது. இதன் மூலமாக மட்டும் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்கிறது.

அதில் ஒருபகுதியை மக்களுக்காக விட்டுத் தருவதன் மூலம் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள தாங்க முடியாத சுமையை மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் வரிக் குறைப்பு செய்வதன் மூலம் பெட்ரோல், டீசல் விலைகளை முறையே ரூ.70, ரூ.60-க்கும் கீழ் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக  கேரளாவில் பெட்ரோல் டீசல் விலையில் 1 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.இந்த விலை குறைப்பு ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலாகிறது” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்