ஈரோடு கிழக்கு இடைதேர்தலால் விரக்தியடைந்த மாட்டு வியாபாரிகள்.. காரணம் இதுதான்.!
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அதிகளவு பணம் எடுத்து வர முடியாததால் ஈரோடு மாட்டு சந்தையில் வியாபாரிகள் வருகை மிக குறைவாக இருந்தது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட அடுத்தடுத்த நாட்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தன. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் படி 1 லட்ச ரூபாய் வரையில் ரொக்கமாக எடுத்து செல்லலாம். அதற்கும் தேவை இருப்பின் அதற்க்கும் ஆவணம் , எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். 10 லட்சம் வரையில் ஆவணம் இருந்தால் கொண்டு செல்லலாம். அதே போல, 5 லட்சம் வரையிலான வங்கி இணையவழி பரிவர்த்தனைகளை ஆர்பிஐ உதவியுடன் கண்காணிக்கப்படும் என கூறப்படுகிறது. இவைகள் தான் ரொக்க பணம் குறித்தான தேர்தல் நடத்தை விதிமுறைகள்.
இன்று வழக்கமாக நடைபெறும் ஈரோடு மாட்டு சந்தை நடைபெற்றது. ஆனால், தேர்தல் பண விதிமுறைகள் அமலில் இருப்பதால் , அதிகளவு பணத்தை எடுத்து வர முடியாத காரணத்தால், வியாபாரிகள் வருகை வெகுவாக குறைந்தது. இதன் காரணமாக மாடுகளை விற்க வந்த மாட்டின் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.