பலத்த எதிர்பார்ப்புடன் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்று தொடக்கம்.!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று நாக்பூரில் தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளதால், இந்த முறை கோப்பையை வெல்லப்போவது யார் என்ற ஆவல் ரசிகர்களிடையே நிலவி வருகிறது. மேலும் இந்த தொடரில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் நுழையும் வாய்ப்பிற்காக இரு அணிகளும் பலத்த போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 1 விக்கெட் எடுத்தால் டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்களை நிறைவு செய்வார், மற்றும் டெஸ்டில் 3000 ரன்கள் மற்றும் 450 விக்கெட்களை எடுக்கும் மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெறுவார்.
அஸ்வின் ஏற்கனவே 88 டெஸ்ட்களில் 449 விக்கெட்கள் மற்றும் 3043 ரன்களை எடுத்துள்ளார். இதற்கு முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் ஷேன் வார்னே (708 விக்கெட்கள்& 3154 ரன்கள்) மற்றும் ஸ்டுவர்ட் பிராட் (450விக்கெட்கள்& 3117 ரன்கள்) மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டாஸ் என்பது இன்றைய போட்டியில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.
இன்னும் சற்று நேரத்தில் டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிக்குள் செல்ல இரு அணிகளும் கடும் போட்டியிடும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.